இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மகரந்த சேர்க்கை அதிகரிப்பால் மகசூலும் அதிகரிப்பு : விவசாயிகளுக்கு கை கொடுத்த சித்திரை பட்ட கம்பு சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சித்திரை பட்டத்தில் விதைத்த கம்பு பயிருக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவியதால், மகரந்த சேர்க்கை அதிகம் நடந்து விளைச்சல் அதிகரித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 450 ஹெக்டேரில் சிறுதானிய பயிர்களான, கம்பு, ராகி, சோளம் பயிர் செய்யப்பட்டு வருகிறது. காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள் 33 ஆயிரத்து 780 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது.கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி ஆகிய யூனியன்களில் வானம் பார்த்த நிலங்களில் சித்திரை பட்டத்தில் கம்பு, சோளம் பயிரிடப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி யூனியனில் உள்ள பூசாரிப்பட்டி, கரடிகுறி, கம்மம்பள்ளி, வென்னம்பள்ளி, சின்னேப்பள்ளி, வரட்டனப்பள்ளி, சின்ன மட்டராப்பள்ளி, எலுமிச்சங்கிரி, போச்சம்பள்ளி, புளியாண்டபட்டி, வாழைதோட்டம், கொடமாண்டபட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.நாட்டு ரகங்களை விட விளைச்சல் அதிகம் கொடுக்கும் "ஐ.சி.எம்.வி., 221' என்ற வீரிய ஒட்டுரக கம்பு மாவட்டத்தில் அதிக பரப்பில் பயிரிடப்பட்டது. பொதுவாக கிராம புறங்களில் கம்பு முக்கிய உணவு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கால்நடைகளுக்கு கம்பு தட்டுகள் முக்கிய தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.பிஸ்கெட் மற்றும் சத்து உணவு பொருட்கள் தயாரிக்கும் பல கம்பெனிகளுக்கு கம்பு மூல மாவு பொருளாக உள்ளது. இதனால், கம்புக்கு எப்போதும் நல்ல கிராக்கி இருக்கும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மே மாத கடைசி வாரத்தில் இருந்து பருவ மழை துவங்கியது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதிகளில் பெய்த பரவலான மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.,அணைக்கு நீர் வரத்து அதிகரித்து ஆடி பட்ட நெல் விதைப்புக்காக ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.மாவட்டத்தில், மூன்று ஆண்டுகளாக சித்திரை மாதத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் அதிக பரப்பில் கம்பு சாகுபடி செய்தனர். இந்தாண்டு மாவட்டத்தில் 5,000 ஏக்கர் கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் கம்பு பயிருக்கு ஏற்ற சீதோஷ்ணநிலை நிலவியதால் மகரந்த சேர்க்கை அதிகம் நடந்து விளைசல் அதிகரித்துள்ளது. தற்போது கம்பு அறுவடை துவங்கிய நிலையில் நல்ல விளைச்சல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரியை அடுத்த பூசாரிப்பட்டியில் கம்பு பயிர் செய்துள்ள விவசாயி நாகராஜ் கூறியது:கடந்த இரு ஆண்டாக கம்பு பயிர் செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பலர் கடந்த இரு ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பில் கம்பு பயிர் செய்தனர். சித்திரை பட்டத்தில் விதைத்த கம்புக்கு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தற்போது, நல்ல முறையில் வளர்ந்துள்ளது.பொதுவாக கம்பு பயிர்களை நோய்கள் தாக்காது என்பதால் மருந்து தெளிக்கும் செலவு இல்லை. ஒரு சில இடங்களில் கம்பு அறுவடை துவங்கியுள்ளது. ஏக்கருக்கு பத்து மூட்டை கம்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வாங்கி வருவதால் இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment