மரபணு மாற்றுப்பயிர் பொறுப்பேற்க வேண்டியது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
10:18 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மரபணு மாற்றுப்பயிர் 0 கருத்துரைகள் Admin
எல்லா மாநிலங்களிலும் பரவலாக எதிர்ப்பு தோன்றியதையடுத்து, குறிப்பாக
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்ற கருத்துக் கேட்பு
கூட்டங்களில் காணப்பட்ட ஏகோபித்த எதிர்ப்பைக் கண்டு, மரபீனி மாற்றுக்
கத்தரிக்காயை அறிமுகம் செய்வதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய
அரசு. இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம் என்ற சொல்லத் துணிவில் லாமல்,
தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கும் வேளாண் தொழில்துறையினருக்கும் ஏற்புடைய வகையில் அறிவியல்
உண்மைகள் நிறுவப்படும் வரை, சுற்றுச் சூழலுக்கும் மனித உடலுக்கும் தீமை
விளைவிக்காது என்பதை நீண்ட காலச் சோதனைகள் நடத்தி முடிவுகள்
காணப்படும்வரை இந்த பி.டி. கத்தரிக்காயை நிறுத்தி வைப்பதாக மத்திய
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித்தான் இத்தனை நாள்களாக விவசாயிகள்
போராடி வந்தனர். ஆனாலும், அதே காரணங்களை அரசே தன் வாயால் சொல்லி,
நிறுத்தி வைப்பதுதானே அரசின் வழக்கம். அந்த வழிவழி வந்த நடைமுறை மாறாமல்,
ஏதோ தாங்களாகவே நிறுத்தி வைப்பதைப்போல பி.டி.கத்தரிக்காயை மூட்டை கட்டி
வைக்கத் தீர்மானித்தார்கள். கடைசியாக, இப்போதாகிலும் இத்தகைய நல்ல முடிவு
எடுத்தார்களே என்பதற்காக மத்திய அரசைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பி.டி. கத்தரிக்காய் தடை செய்ததில் வெற்றி அடைந்த களிப்பில் இன்னும் சில
கடமைகளை வேளாண் போராளிகள் மறந்துவிடக்கூடாது. இந்தியாவில், கத்தரிக்காய்
போன்று 46 வகை உணவுத் தாவரங்களுக்கு இத்தகைய மரபீனி மாற்று வடிவங்கள்
சோதனை அடிப்படையில், வளர்க்கப்பட்டு வருகின்றன. இவையும் மெல்ல மெல்லத்
தலைகாட்டும் என்பதை மறந்து விடக் கூடாது. இவற்றில் கத்தரிக்காய்போல,
அனைவராலும் உண்ணப்படும் முக்கிய பயிரான நெல் ரகமும் இருக்கிறது.
கத்தரிக்காய் மீதான எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால், சற்றே கிடப்பில்
போடப்பட்ட மரபீனி மாற்று நெல் ரகங்கள் தற்போது வேறு வடிவம் கொள்ளவும்,
அவற்றை வீரிய ரகங்களாகச் சந்தைக்குள் கொண்டுவரவும் புதியபுதிய உத்திகளைக்
கையாளுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இவை வீரிய ரகங்களாகச் சந்தையில்
அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றை பிரித்தறியும் திறன் நம்மில் பலருக்கும்
கிடையாது. ஆகவே, வேளாண் போராளிகள் இத்தகைய மரபீனி மாற்று ஆய்வுக்காக
களத்தில் சாகுபடி நிலையில் உள்ள அனைத்துப் பயிர்க ளையும் கண்டறிந்து
அத்தகைய சோதனை முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு
உள்ளது.
பி.டி. கத்தரிக்காய் எதிர்ப்பு வெற்றியில் முடிந்ததற்கு காரணம், இதை
அனைவரும் சாப்பிடு கிறோம் என்பதுடன் இப்பயிர் அனைத்து மாநிலங் களிலும்
பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது என்பதும்தான். கத்தரிக்காய் அல்லாமல்,
சில மாநிலங்கள் மட்டுமே விளைவிக்கும் சில வகை உணவுப் பயிர்களுக்கு மரபீனி
மாற்று அறிமுகம் செய்யப் பட்டிருந்தால் நிச்சயமாக முழுமையான எதிர்ப்புத்
தோன்றியிருக்காது. சில மாநிலங்களில் மட்டும் எதிர்ப்பு எழுந்து,
பிசுபிசுத்துப் போயி ருக்கும்.
இத்தகைய குளறுபடிகள் அனைத்துக்கும் அரசையும் இதற்கான பொறுப்பு வகிக்கும்
ஆட்சி யாளர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இந்தக்
குளறுபடிக்கு மிகப்பெரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண்
ஆராய்ச்சியாளர்களும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
பி.டி. கத்தரிக்காய் அறிமுகம், சாகுபடி இவற்றுக்கு மூல ஆதார நிறுவனம்
மான்சாண்டோ. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான மைக்கோ மூலமாகத்தான்
இந்தியாவில் பி.டி, கத்தரிக்காய் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது எந்த வித
ஆபத்தையும் விளைவிக்காது என்று பரிந்துரை செய்த நிறுவனம் இந்திய வேளாண்
ஆராய்ச்சி நிறுவனம்.
இந்திய ஆட்சியாளர்களைவிட, இந்திய ஆராய்ச்சியாளர்களைக் கைக்குள்
போட்டுக்கொள்வதில் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான்,
இத்தகைய தேவையற்ற மரபீனி மாற்று உணவுப் பொருள்கள் இந்தியாவுக்குள்
நுழையக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக்
கழகம் ஆகியவற்றின் பல ஆராய்ச்சிகளுக்கு நிதிநல்கை பெருந்தகையாளர்களாக
மான்சாண்டோ, ஃபோர்டு போன்ற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதோடு, ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்களைப்
பெறும் களப்பணிக்கு, நம் ஆராய்ச்சியாளர்களை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற
நாடுகளுக்கு நிதிநல்கையுடன் அழைத்துச் செல்லவும் செய்கி றார்கள். இந்த
ஆராய்ச்சியாளர்கள்தான் அரசு மற்றும் பல்கலைக்கழகப் பணிக ளில் உயர்
பதவிக்கு வருபவர்களும்! பழைய நட்பு புதுப்பிக்கப் படுகிறது. அன்பினால்
நெருக்கடி தந்து, தங்களுக்குச் சாதகமான மரபீனி மாற்றுப் பயிர்களை
இந்தியச் சந்தையில் நுழைக்கும் அனைத்து கருத்து ருக்க ளையும் தயாரிக்க
வைக்கிறார்கள். பிறகுதான் ஆட்சியாளர்களை மயக்கும் வித்தையை இந்த
பன்னாட்டு நிறுவனங்கள் கையில் எடுக்கின்றன.
இந்த நிலைமை ஏற்படக் காரணம் இந்திய அரசு, வேளாண் ஆராய்ச்சிகளில் போதிய
ஆர்வம் காட்டாமல், போதிய நிதி ஒதுக்காமல், இவ்வாறாக அன்னிய
நிதிநல்கைகளைப் பெற்றுக் கொள் வதை அனு மதிப்பதுதான் என்றால் அது
மிகையாகாது. இந்திய அரசுப் பணத்தில் இந்திய ஆராய்ச்சி யாளர்கள் தங்கள்
ஆய்வுகளை நடத்தவும், பன்னாட்டு நிதிநிறுவனம், அல்லது அத்தகைய தொடர்பு கள்
உள்ள நிறுவனங்களின் நிதிநல்கையைத் தவிர்ப்பதும் இந்திய வேளாண்
ஆராய்ச்சியாளர்கள் முழுக்க முழுக்க இந்தியத் தன்மையோடு நிலைத்து நிற்க
நிச்சயம் உதவியாக இருக்கும்.
நன்றி : தினமணி
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மரபணு மாற்றுப்பயிர்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது