விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
6:29 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்கம், அனைத்துக் கட்சிகள் சார்பில், ராம்ஜிநகர் தேசியப் பஞ்சாலை தொழிலாளர் கட்டட சங்கம் முன் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அந்தநல்லூர் ஒன்றிய அமைப்பாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். புங்கனூர் பஞ்சாயத்து தலைவர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் மனோகர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் பாலசுப்பரமணியன் உள்பட பலர் பேசினர்.
"திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் பஞ்சாயத்து, கொத்தமங்கலம், கள்ளிக்குடி, புங்கனூர் ஏரிகளில் சாலை அமைப்பதை தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை சமர்பிக்காதபட்சத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த ஏப்ரல் 15ம் தேதி சாலை பணியை துவக்கிய தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச்.,-67 அதிகாரிகள், துணைபோன மாவட்ட உயரதிகாரிகளை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும்.
தாயனூர், புங்கனூர், கள்ளிக்குடி பகுதி நெடுமலை கல்குவாரிகளை முறையாக ஏலத்துக்கு கொண்டுவராமல் தாமதப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும், கூலித்தொழிலாளிகள் பயனடைய உடனடியாக ஏலத்துக்கு கொண்டுவர வேண்டும். ராம்ஜிநகர் ஸ்ரீஉமாபரமேஸ்வரி பஞ்சுமில் நூற்பாலையை மூடிய நிர்வாகத்தை கண்டித்தும், மூடிய நூற்பாலையை அரசு எடுத்து நடத்த வேண்டும்' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், புதியதமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. தமிழக விவசாயிகள் சங்க மணிகண்டம் ஒன்றிய தலைவர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது