இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு எதிரொலி குடும்பத்தினர் மட்டுமே வேலை செய்யும் பரிதாபம்

விவசாய வேலை செய்வதற்கு கூலியாட்கள் முன்வராத காரணத்தால் பெரும்பாலான பகுதியில் நிலத்தின் உரிமையாளர், அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே விவசாய பணியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயமே பிரதான தொழிலாளாக உள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சீஸனில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணை வித்துகளை சாகுபடி செய்வது வழக்கம்.

விவசாயத்தை பொறுத்தவரை விதைத்தல், நடவு செய்தல், அறுவடை செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் நில உரிமையாளர் மட்டுமே செய்ய முடியாது. விவசாய தொழிலாளர்கள் மூலமே அனைத்து பணிகளையும் செய்ய முடியும். ஆனால், சமீபகாலமாக விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. தமிழகம் முழுவதும் 385 ஊராட்சி ஒன்றியம், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்.,கள் உள்ளது. கிராம பஞ்.,களில் 2008 மே மாதம் முதல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைமுறைக்கு வந்தது. திட்டத்தின் கீழ் பஞ்.,களில் ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு தினமும் 80 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டது.


ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் 100 முதல் ஆயிரம் தொழிலாளர்கள் தினமும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி தூர்வாருதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு சென்று விடுவதால் விவசாய வேலைக்கு கூலியாட்கள் பற்றாக்குறை மேலும் அதிகரித்து விட்டது.


கூலியாட்கள் கிடைக்காததால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நில உரிமையாளர்கள் தாங்களே நிலத்தை உழுது, விதைத்து, அறுவடை செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கூலியாட்கள் பற்றாக்குறையால் சில இடங்களில் கணவன், மனைவி இருவர் மட்டுமே தங்கள் நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களும் தங்கள் தேவைக்கும், தங்களால் முடிந்த அளவிற்கு குறைவான நிலத்தில் மட்டுமே பயிர்களை சாகுபடி செய்து, மீதமுள்ள இடத்தை தரிசாக விட்டு விடுகின்றனர். கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக வருங்காலத்தில் உணவு உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னண்ணன் கூறியதாவது: எங்களுக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. வழக்கமாக நான்கு ஏக்கர் நிலத்திலும் பயிர் சாகுபடி செய்வோம். தற்போது கோடைமழை பெய்ததால் நான்கு ஏக்கர் நிலத்திலும் நிலக்கடலை பயிர் போட முடிவு செய்தோம். ஆனால், கூலியாட்கள் கிடைக்கவில்லை.
எனவே, நானும், எனது மனைவியும் மட்டுமே விவசாயம் செய்ய முடிவு செய்தோம். எங்களால் நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்பதால் அரை ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் சாகுபடி செய்ய முடிவு செய்தோம். மீதி நிலத்தை தரிசாக விட்டு விட்டோம். நான் நிலத்தில் ஏர் உழுது கொண்டிருக்க, என் மனைவி கடலை விதையை தூவினார். செடிகள் வளர்ந்த பின்னர் நாங்களே களை எடுத்து, நீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டியுள்ளது. கூலியாட்கள் பற்றாக்குறையுள்ள நிலையில், எங்களுக்கும் விவசாய தொழில் தெரியாமல் இருந்தால், நான்கு ஏக்கர் நிலத்தையும் தரிசாக விட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். கூலியாட்கள் பற்றாக்குறையால் காரணமாக ஏராளமான நில உரிமையாளர்கள் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலங்களை தரிசாக போடுகின்றனர். இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் தமிழகத்தின் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்படும்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment