அந்தியூர் சந்தையில் கொட்டு புளி விற்பனை அதிகரிப்பு
5:54 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
சந்தைக்குள் வண்டியில் வைத்தே புளி வியாபாரம் நடந்தது. புளி வியாபாரி ஒருவர் கூறியதாவது: அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள பஞ்சாயத்து புளிய மரங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட சுவையான புளியை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம். தோசை வடிவிலான புளியை காட்டிலும், இந்த புளி அதிக வாசனையும், ரசத்துக்கு அதிக சுவை சேர்ப்பதாகவும் அமையும். தோசை புளி முழுக்க முழுக்க எந்திரத்தால் கொட்டை எடுக்கப்படுகிறது. இதனால், மேல் ஓடு, புளியங்கொட்டை கலந்தும் வெளி வருகிறது.
இவற்றோடு புளி ஒன்று சேரும் போது, அதன் உண்மையான சுவை குறைந்து, ரசம் வைக்கும் போது, திருப்தியில்லாத உணர்வு ஏற்படுகிறது. ஆனால், கொட்டு புளியை, கைகளால் தட்டி, ஓட்டையும், கொட்டையையும் தனியாக பிரித்து எடுக்கிறோம். இதனால், புளியின் சுவை முற்றிலுமாக கிடைக்கும்பட்சத்தில், ரசம் பருகும் திருப்தியை ஏற்படுத்தும். இதன் காரணமாக, சந்தைக்கு வரும் மக்கள் கொட்டு புளியை விரும்பி வாங்கி செல்கின்றனர். பாச்சாம்பாளையம், பள்ளியபாளையம் உள்ளிட்ட அருகாமையிலுள்ள ஊர்களிலிருந்து நான்கிற்கும் மேற்பட்ட வண்டியிலும் தலா 80 கிலோ புளிக்கு மேல் கொண்டு வருவோம்.
இந்த வாரம் கொட்டை புளி கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். சென்ற வார விலையேதான் விற்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அந்தியூர் சந்தையில் குவிந்திருந்த காய்கறிகளில் கேரட் கிலோ 40 ரூபாய், பீன்ஸ் 60, பீட்ரூட் 30, அவரை 40, உருளைகிழங்கு 20, வெண்டைக்காய் 30, பெரிய வெங்காயம் 15, சின்ன வெங்காயம் 20, தக்காளி 20, கத்தரிக்காய் 40, பச்சை மிளகாய் 40, காலி ஃபிளவர் 15, பாவக்காய் 40, இஞ்சி 20, பூண்டு 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சென்ற வாரத்தை காட்டிலும் காய்கறி விலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்தியூர் சந்தையில் பொருட்கள் வாங்க நடப்பு வாரம் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் வெள்ளம் குவிந்திருந்தது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது