'சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,' : ஒன்றிய கூட்டத்தில் கோரிக்கை
5:50 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
'சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,' என, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். தலைவர் தங்கமணி தலைமையில் கூட்டம் நடந்தது. துணை தலைவர் சிங்காரம் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ராமநாதன் வரவேற்றார்.
விவாதங்கள் வருமாறு:
பாலசுப்பிரமணியன் (மார்க் சிஸ்ட்): இங்கு அமையவுள்ள வீடியோகான் தொழிற்சாலையில், இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும் என, அரசு அறிவித்தது. இங்குள்ள இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பாக்கியம் (அ.தி.மு.க.,): வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.
தலைவர்: தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்புவோம்.
பாக்கியம்: அரசின் இலவச வீடு திட்ட பயனாளிகள் தேர்வுக்குழுவில், ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களை சேர்க்க வேண்டும். இல்லாதபட்சத் தில், முறைகேடு நடக்க வாய்ப் புள்ளது.
தலைவர்: பயனாளி குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் தெரியும். குழுவில் ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களை சேர்க்க வலியுறுத்துவோம்.
சத்தியமூர்த்தி (காங்.,): பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும்.
கந்தசாமி (தி.மு.க.,): தஞ்சாக்கூர், ஆவரங்காடு, வெள்ளிக்குறிச்சியில் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆழ்குழாய்களும் வறண்டு விட்டன.
மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என, அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.
தலைவர்: நீர்நிலைகளை தூர்வார வேண்டும். வறட்சி நிவாரண பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்க கோரி, தீர்மானம் நிறைவேற்றப்படும்.
சண்முகநாதன் (தி.மு.க.,): நான்கு வழிச்சாலை பணிகளுக்காக முத்தனேந்தல், ராஜகம்பீரம், மானாமதுரை பை பாஸ் பகுதிகளில், குடியிருப்புகளை இடிக்க போவதாக பீதி நிலவுகிறது. மற்ற பகுதிகளில் பைபாஸ் ரோடு அமைப்பது போல, இங்கும் அமைக்க வேண்டும்.
தலைவர்: இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் எழுதலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது