மதிப்பூட்டிய பொருட்கள் மூலம் விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்ற முயற்சி
1:28 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
மதிப்பூட்டிய பொருட்கள் மூலம் விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்ற நாமக்கல் மாவட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் சகாயம் தகவல் தெரிவித்தார்.இது தொடர்பாக, விவசாயிகளுக்கு உதவும் வகையில் நாமக்கல்லில் வரும் 17-ம் தேதி பிரமாண்ட கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. இக் கண்காட்சிக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சகாயம் பேசியது:விவசாயிகள் தங்களது பொருட்களை அதே நிலையில் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட இருமடங்கு லாபம் பெற வேண்டுமெனில் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டியவையமாக மாற்றம் செய்ய வேண்டும். உழவன் உணவகத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர். இதேபோல், அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பகுதிக்கு தகுந்த வேளாண் சார்ந்த தொழில்களை தேர்வு செய்து அத்தகைய பயிர் மூலம் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். தொழில் துவங்க முன்வரும் விவசாயிகளுக்கு போதிய பயிற்சிகள் அளித்து, வங்கிகள் மூலம் தொழில்துவங்க கடனுதவியும் செய்துதரப்படும்.இத்தகைய தொழில்கள் துவங்குவதால் நடுத்தர விவசாயிகளின் வாழ்வுநிலை மேம்படும். வேளாண்சார்ந்த தொழில்களில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் வருமானமும் அதிகரிக்கும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்வாய்ப்புகள் மற்றும் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரித்தல் குறித்து வரும் 17-ம் தேதி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, உணவுப் பதப்படுத்துதல் துறை, மரவள்ளி ஆராய்ச்சி மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலை., கதர்கிராம தொழில் வாரியம், வேளாண் பொறியியல் துறை, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்சார்பு துறைகள் சார்பில் 40 அரங்குகள் நிர்மானிக்கப்படும். இதில், மதிóப்பு கூட்டிய பொருட்களை எப்படி உற்பத்தி செய்வது, வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் துவங்கும் முறைகள், அரசின் சலுகைகள், மானிய உதவி, திட்டங்கள் இடம்பெற்றிருக்கும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர். குறைந்தபட்சம் 50 தொழில்கள் துவங்குவதற்கு தயார்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர். இக் கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் சு. துரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அறிவழகன், முன்னோடி வங்கி மேலாளர் டி.ஆர். சுரேஷ், வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ப. மோகன் மற்றும் விவசாய பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது