இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் சுற்று பாசனத்திற்கு வரும் 18ல் தண்ணீர் திறப்பு

உடுமலை திருமூர்த்தி அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், முதலாம் மண்டல பாசனத்துக்கு நான்காவது சுற்று தண்ணீர் 12 நாட்கள் தாமதமாக, ஏப்., 18ல் திறக்கப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 446 ஏக்கர் நிலங்கள் திருமூர்த்தி அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. 135 நாள் மண்டல பாசன காலத்தில், 90 நாட்கள் , சுற்றுக்கள் அடிப்படையில், 9,012 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 17 நாள் திறப்பு, ஆறு நாள் நிறுத்தம் என்ற சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், கடை மடை பகுதிகளுக்கு போதிய அளவு அழுத்தம் கிடைக்கும் வகையில், 17 முழு அளவும், கடைமடை பகுதிகளுக்கு ஆறு நாள், பாதியளவும் திறந்து விடப்பட்டு வருகிறது.


முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், திட்டத்தின், முக்கிய ஆதாரமாக காண்டூர் கால்வாயில், 3.5 வது கி.மீ., பிப்.,19ல், திடீர் உடைப்பு ஏற்பட்டதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வருவது தடைபட்டது. காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணியை முடித்து, பிப்., 27ல், மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய் உடைந்ததால், ஒன்பது நாட்கள் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வராத நிலையிலும், இரண்டாம் சுற்றுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, திருமூர்த்தி அணை நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. இருப்பினும், மூன்றாம் சுற்று நாட்களை குறைத்தும், பாசன பகுதிகளை பிரித்தும் தண்ணீர் வழங்கப்பட்டது. நேற்று, மூன்றாம் சுற்று நிறைவடைந்தது. தொடர்ந்து, நான்காம் சுற்றுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலையில், திருமூர்த்தி அணை நீர் இருப்பு திருப்தியாக இல்லாததால், முழுமையான அளவு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அணை நீர் மட்டம், மொத்தமுள்ள 60 அடியில், 21.99 அடியாகவும், நீர் இருப்பு 618.84 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 710 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில், மழை இல்லாததால் பாசன பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுவதால், பாசன சங்க நிர்வாகிகள் கருத்து கேட்கப்பட்டது. உடனடியாக நான்காம் சுற்றுக்கு தண்ணீர் திறக்காமல், ஏப்., 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'போதிய நீர் இருப்பு இல்லாததால், நான்காம் சுற்று தண்ணீர் திறப்பதில் பிரச்னை ஏற்பட்டது. குறைந்தபட்சம் 1,300 மில்லியன் கன அடி நீர் அணையில் சேமித்தால் மட்டுமே முழுமையான அளவு தண்ணீர், முழுமையான அழுத்தத்தில் வழங்க முடியும். விவசாயிகளின் கருத்து கேட்டு, 12 நாட்கள் தாமதமாக ஏப்., 18ம் தேதி நான்காம் சுற்று தண்ணீர் திறக்கப்படும்,' என்றனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment