இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கோடை காலம் துவங்கியதால் இளநீர் விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி; மக்கள் அதிர்ச்சிகோடை சீசன் துவங்கியுள்ளதால் இளநீர் ஏற்றுமதி அதிகரித்து, விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தியில் பல ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சில மாதங்களாக கொப்பரைக்கு நிலையான விலை கிடைக்காததால் தோப்புகளில் தேங்காய் கொள்முதல் விலையும் குறைந்தது. இந்நிலையில், கோடை சீசனையொட்டி இளநீர் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து ஆண்டு முழுவதும் இளநீர் சென்னை, பாண்டிச்சேரிக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக தோப்புகளுக்கு சென்று இளநீர் காய்களை கொள்முதல் செய்கின்றனர்.இந்தாண்டு கோடை சீசன் முன்கூட்டியே துவங்கியுள்ளதால் இளநீருக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. நகரப்பகுதிகளில் விற்பனை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் இளநீர் காய்களை கொள்முதல் செய்ய தோப்புகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான லோடு இளநீர் உடுமலை, பொள்ளாச்சி பகுதியிலிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. உள்ளூர் விற்பனைக்கு குறைந்தளவு மட்டுமே காய்கள் பறிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இளநீர் காய் விலை அதிகபட்சமாக 6 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்தது. சிவப்பு காய் மற்றும் வீரிய ரக தென்னையிலிருந்து பறிக்கப்படும் காய்களுக்கும் இந்த விலையே கிடைத்து வந்தது.
தற்போது, சென்னை, பாண்டிச்சேரிக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் விலை 4 ரூபாய் அதிகரித்து தற்போது 10 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
இளநீர் உற்பத்திக்கென தனியாக வீரிய ரக மரங்கள் இப்பகுதியில் வளர்க்கப்படுகிறது. பிற மரங்களிலும் தேவை இருந்தால் இளநீர் அறுவடை செய்யப்படுகிறது. 30 நாட்களுக்கு ஒரு முறை மரத்திலிருந்து இளநீர் பறிக்கலாம்.
கோடை சீசனில் இளநீர் உற்பத்தி குறைவாகவே இருக்கும். விலை வீழ்ச்சி காரணமாக தேங்காய் பறித்து கொப்பரையாக மாற்றுவதால் போதிய லாபம் கிடைப்பதில்லை. எனவே கோடை சீசனில் இளநீர் காய்களை அறுவடை செய்ய ஆர்வம் காட்டுகிறோம் இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment