மங்கி வரும் வெங்காய விவசாயம்
5:19 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மங்கி வரும் வெங்காய விவசாயம் 0 கருத்துரைகள் Admin
நன்றி: தினமணி
கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் அழகாகப் பூத்திருக்கும் வெங்காயச் செடிகள்.
கடலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும், வேளாண் துறையின் ஆதரவு போதுமான அளவுக்கு இல்லாததால், விவசாயம் செய்வது குறைந்து போய்க்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல், பழனி, கரூர், நாமக்கல் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. 1995-க்கு முன் கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஒன்றியம் நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, உப்பளவாடி உள்ளிட்ட கிராமங்களிலும், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங்களிலும் சின்ன வெங்காயம் சுமார் 1000 ஏக்கர் வரை பயிரிடப்பட்டு வந்தது.ஆனால் கடலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு நியாயமான விலை கிடைக்காததால், பயிரிடும் பரப்பளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.கடலூரில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் சாதாரண ரக சின்ன வெங்காயத்துக்கும், பெல்லாரி ரக பெரிய வெங்காயத்துக்கும் இடைப்பட்ட நடுத்தரமான அளவைக் கொண்டதாக இருக்கும். எனவே மக்கள் கடலூர் நாணமேடு வெங்காயத்தை விரும்பி வாங்குவர். சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சுமார் 100 ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது. வெங்காயம் நட்டு 100 நாள்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். உச்சிமேடு, நாணமேடு, சுபஉப்பளவாடி, கண்டக்காடு, தேவனாம்பட்டினம் கிராமங்களில் தற்போது வெங்காயம் பூத்துக் குலுங்கும் நிலையில் காணப்படுகிறது.கடலூர் பகுதியில் வெங்காயத்துக்கு நியாயமான விலை கிடைக்காததால், வெங்காய விதை தயாரிப்புக்காக, பூவைத் துண்டிக்காமல், வெங்காயத்தையும் எடுக்காமல் விதைக்காக விட்டு விடுகிறார்கள். பிற மாவட்ட விவசாயிகள் கடலூர் வந்து வெங்காய விதைகளை வாங்கிச் செல்கிறார்கள். அதில் ஓரளவுக்கு கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயி தேவனாம்பட்டினம் செல்வம் கூறியது: நாணமேடு வெங்காயம் சுவை மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் கடலூரில் வெங்காயத்துக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. மற்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று, நல்ல விலைக்கு விற்கும் சந்தை வாய்ப்பும் இல்லை.மற்ற மாவட்டங்களில் வெங்காயத்துக்கு வழங்கப்படும் சலுகைகளும் மானியங்களும் கடலூர் மாவட்டத்தில் இல்லை.தற்போது வெங்காய விதை தயாரிப்பில் பல விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை விதை கிடைக்கும். கடந்த ஆண்டு கடலூர் வெங்காய விதை விலை ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் வரை சென்றது. கடந்த சில ஆண்டுகளில் கிலோ ரூ.300-க்குக் கூட குறைந்து இருக்கிறது. விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றுக்கு அரசு மானியம் மற்றும் சலுகைள் அளித்தால், கடலூர் மாவட்டத்தில் வெங்காயம் சாகுபடி அதிகரிக்கும் என்றார் செல்வம். இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் அசோகன் கூறியது: நாணமேடு வெங்காயம் லேசான உப்பு கலந்த நிலத்தடிநீர் உள்ள கடலோர கிராமங்களில் நன்றாக வளர்கிறது. கூடுதல் நீரைத் தன்னகத்தே கொண்டது. அதனால் பெரிதாக இருக்கிறது. மற்ற ரகங்களுடன் ஒப்பிடும்போது நாணமேடு வெங்காயத்தைக் கூடுதல் நாள்கள் சேமித்து வைக்க முடியவில்லை.கடலூர் பகுதியில் வெங்காயம் விரைவில் பூப்பதால் விதை தயாரிப்பு லாபகரமாக இருக்கும். வெங்காயம் பற்றி கோவையில் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. கோ ஆன் 5 என்ற புதிய ரக வெங்காய விதை வெளியிடப்பட்டு உள்ளது. அது கடலூர் நாணமேடு வெங்காயத்தின் குணங்களை அதிகம் கொண்டது. அந்த ரகத்தை கடலூர் விவசாயிகள் பயிரிட முன்வர வேண்டும் என்றார் அசோகன்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மங்கி வரும் வெங்காய விவசாயம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது