இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாய உற்பத்திக்கு கை கொடுக்கும் தொழில்நுட்பம், இயந்திரங்கள்

தொழில்நுட்பமும், இயந்திரங்களின் பயன்பாடும் விவசாய உற்பத்திக்கு கை கொடுக்கின்றன என்றார் திருச்சி மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா. திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை ஆகியவற்றின் அலுவலர்கள் பங்கேற்ற பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: ஆத்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில் விவசாயிகளின் தொழில்நுட்பத் திறனை அதிகரிக்கச் செய்வதற்காக மாவட்ட, கிராம அளவிலான பயிற்சிகள், புதிய தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு பிற மாவட்டங்களில் விவசாயம் சிறப்பாகச் செயல்படும் இடங்களுக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று வருதல், செயல்விளக்கங்கள் செய்து காட்டுதல், விவசாயிகள் - ஆராய்ச்சியாளர்கள் கலந்துரையாடுதல், தொழில்நுட்பச் செய்திகள் அடங்கிய பிரசுரங்கள் வெளியிடுதல், வயல் தின விழா, பண்ணைத் தொழில்நுட்ப ஆலோசனை மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய உற்பத்தி நிலப்பரப்பு முன்பு இருந்த அளவுக்கு இல்லாமல் குறைந்தாலும், உற்பத்தி இலக்கு குறையாமல் இருக்கிறது. விவசாயத்தில் நவீன உத்திகளைக் கடைப்பிடிப்பதால்தான் உற்பத்தியை அதிகரிக்க முடிகிறது. வேளாண்மைப் பணிகள் மேற்கொள்ள விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த படித்தவர்களே முன்வருவதில்லை. வேளாண் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றுவதாலும், ஆள்கள் பற்றாக்குறையைப் போக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதாலும் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்' என்றார் சவுண்டையா. கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் என். பொன்னுசாமி, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொன்னுசாமி, தேசிய அளவிலான ஆத்மா திட்ட ஊக்குநர் சங்கசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். இந்தக் கூட்டத்தில் கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். வேளாண் துணை இயக்குநர் எஸ். சிவராஜ் வரவேற்றார். எம்.ஆர். ராமநாதன் நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment