இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தீவனத்தட்டுப்பாட்டால் கால்நடை விற்பனை அதிகரிப்பு



தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கால்நடைகளுக்கான தீவனத்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரோட்டில் நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு, புளியம்பட்டி, பொள்ளாச்சி, திருப்பூர், கொடைக்கானல், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காங்கேயம், கோவை, உப்புடமங்கலம், அவினாசி, கருமத்தம்பட்டி, செங்கப்பள்ளி, கோபி, சத்தி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பசுமாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஜெர்சி, சிந்து, நாட்டுகிராஸ், சிந்து கிராஸ், சீமை, சுகந்தினி, செச்செப், பிளாக் அண்ட் ஒயிட் ஆகிய மாடுகளும், எருமை மாட்டில் முரா, நாட்டு கிராஸ் ஆகிய ரகங்களும் வருகின்றன. தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் தீவனத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மாட்டுத் தீவனங்களான புல், சோளம், கேழ்வரகு, பிண்ணாக்கு ஆகியவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. மாட்டுத் தீவனத்தின் விலை உயர்வாலும், தட்டுப்பாடு ஏற்படுவதாலும் விவசாயிகள் பலரும் கால்நடைகளை விற்கத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக வழக்கமாக சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையை விட நேற்றைய சந்தையில் கூடுதலான மாடுகள் வந்தன. மாடுகளின் வரத்து அதிகரிப்பால் விலை 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மாட்டு வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு சந்தையில் இருந்து வாரந்தோறும் கர்நாடகா மாநிலத்துக்கு 50 லோடு, கேரளாவுக்கு 15 லோடு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு 20 லோடு மாடுகள் செல்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கோடை வெயில் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாட்டு தீவனங்களான பிண்ணாக்கு, சோளம், கேழ்வரகு, புல் விலை உயர்ந்துள்ளது. தீவனப்பற்றாக்குறை காரணமாக மாடு வளர்ப்பவர்கள் பலர் மாடுகளை விற்று வருகின்றனர். விவசாய நிலங்கள் வைத்துள்ளவர்கள் மட்டும் தங்கள் மாடுகளை பராமரித்து வருகின்றனர். நிலம் இல்லாமல் வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள் தீவனம் வாங்க முடியாமல் மாடுகளை விற்கத் துவங்கி விட்டனர். வாரந்தோறும் நடக்கும் மாட்டு சந்தையில் சராசரியாக 300 மாடு, 200க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் விற்பனைக்கு வரும். நடப்பு வாரம் 400க்கும் மேற்பட்ட பசு மாடுகள், 350க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் விற்பனைக்கு வந்தன. பசு மாடுகள் 12 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடுகள் 14 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. சென்ற காலங்களை விட தற்போது மாடுகள் விலை 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
அக்னி வெயில் துவங்க இரண்டு மாதங்களுக்கு முன்னரே தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாடு விற்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வெயிலில் தாக்கம் அதிகரிக்கும் போது மாடுகள் வரத்து இன்னும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment