இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வெள்ளாடு வளர்க்கும் திட்டத்துக்கு அரசின் 'கருணை' தேவை!

நன்றி: தினமலர்

சுழற்சி முறையில் வெள்ளாடு வளர்க்கும் திட்டம், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2002 முதல் செயல்பாட்டில் உள்ளது; இதுவரை 470 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன; 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையாக உள்ள இத்திட்டத்துக்கு, தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கி, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.

சுழற்சி முறையில் வெள்ளாடு வளர்க்கும் திட்டத்தை, திருப்பூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கழகமும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கின பாதுகாப்பு பல்கலையும் இணைந்து கடந்த 2002ல் துவக்கின. இத்திட்டத்துக்கு அரசு சார்பு இல்லாத தனியார் தொண்டு நிறுவனங்கள் முகாம் நடத்த, அதிக அளவில் உதவின; தற்போதும் உதவுகின்றன. கிராமப்புற மற்றும் ஏழை பெண்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை அளிக்கும் இத்திட்டத்துக்கு, அரசு தரப்பில் இதுவரை நிதி ஒதுக்கப்பட வில்லை.

திட்டத்தின் நோக்கம்: கால்நடை துறை சார்பில் ஒன்பது முதல் 12 வயதுடைய ஒரு பெட்டை ஆடு, ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ள பெண்களிடம் கொடுக்கப்படும்; ஒன்றரை ஆண்டு ஆடு வளர்க்க, அவரே பொறுப்பாளர். குறிப்பிட்ட காலம் முடிந்த பின், வெள்ளாடு (பெட்டை) போடும் குட்டியை, கால்நடை துறையிடம் கொடுக்க வேண்டும். இதற்கான உறுதிமொழி கடிதத்தில், ஆடு கொடுக்கும் போது, அப்பகுதி ஊராட்சி தலைவர் முன்னிலையில் கையெழுத்து பெற்றுக் கொள்ளப்படும்.பெட்டை ஆடு போடும் குட்டியை பெற்று, மற்றொரு கிராமத்தில் உள்ள ஏழை பெண்ணுக்கு வழங்கப்படும். அக்குட்டி கிடாவாக இருப்பின், அவற்றை உள்ளூர் சந்தையில் விற்று, அவற்றுக்கான மதிப்பை கால்நடை துறையிடம் தர வேண்டும்.

முதலில் போடப்படும் குட்டியை மட்டும், கால்நடை துறையினர் பெற்றுக் கொள்வர்; அதன்பின் போடப்படும் அனைத்து குட்டிகளும் முதலில் வெள்ளாடுகளை பெற்றுக்கொண்ட பெண்ணுக்கே சொந்தமாகும்.இத்திட்டத்தில், 2002ல் முத்தணம்பாளையம் பகுதியில் 25 பேர்; 2003ல் உகாயனூர் பகுதியில் 25; 2005ல் வரக்குட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, பருவாய், பொல்லிக் காளிபாளையம் பகுதிகளில் 85; 2007 மற்றும் 2008ம் ஆண்டு முறையே 50 மற்றும் 141 ஆடுகள் வழங்கப்பட்டன; கடந்தாண்டு அதிகபட்சமாக இடுவாய், இடுவம்பாளையம், கணபதிபாளையம், வேட்டுவபாளையம், பெரியபுத்தூர், பூண்டி, கோபுனோரி, அரக்கடவு, பட்டிசாலை, கோடப்பட்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் 144 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை மாவட்டம் முழுவதும் 470 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்; இந்த ஆடுகள் மொத்தம் 2,400 குட்டிகள் வரை ஈன்று, அனைத்து குட்டிகளும் 36 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன. முதலில் வழங்கப்பட்டுள்ள ஆடுகள், ஈன்ற குட்டிகள் என மொத்த மதிப்பு 45 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது.

கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலை தலைவர் செல்வராஜ் கூறியதாவது:கிராமப்புற பெண்களுக்கு தொழில் தரும் திட்டமாக, சுழற்சி முறையில் வெள்ளாடு வளர்ப்பு திட்டம் அமைந்துள்ளது. இதனால் பயன் பெறும் கிராமப்புற பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, தனியார் அமைப்புகள் மூலமாகவே முகாம்கள் நடத்தப்படுகின்றன; முகாம் நடத்த போதிய நிதியில்லை. தமிழக அரசு சார்பில் குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கினால், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்த முடியும். அனைத்து கிராமங்களுக்கும், இத்திட்டம் சென்றடையும். இவ்வாறு, செல்வராஜ் தெரிவித்தார்.கிராமப்புற பெண்களால் மட்டுமே ஆடு வளர்ப்பை தொழிலாக கொண்டு, வாழ முடியும். இளம்பெண்கள் நகரத்தை நாடி, வேறு தொழில்களுக்கு வந்த போதிலும், ஆர்வமுள்ள வயதானவர்கள் சொந்த ஊரில் பிழைத்துக் கொள்ள இத்திட்டம் சிறந்த வழி; குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இத்திட்டத்துக்கு அரசின் நிதியுதவி அவசியம்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment