காய்கறியில் "காசு பார்க்கும்' விவசாயிகள்
11:00 PM காய்கறியில் "காசு பார்க்கும்' விவசாயிகள், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
வழக்கமான சாகுபடியைக் காட்டிலும் காலத்துக்குத் தகுந்த மாதிரியான சாகுபடியில் ஈடுபட்டால் காசு கொழிக்க முடியும். இதை புதுச்சேரி விவசாயிகள் சிலர் நிரூபித்து வருகின்றனர்.ஒரு காலத்தில் மணிலா உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பெரும்பாலும் காய்கறி சாகுபடிக்கு மாறியுள்ளனர். அறுவடைக்குத் தயாராகும் காய்கறிகளுக்கு உழவர் சந்தை பெரிய அளவில் மார்க்கெட் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளையும், அதை விற்பனை செய்ய வருவோரையும் அரசு அனுப்பி வைக்கும் லாரி உழவர் சந்தையில் இறக்கி விடுகிறது. உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகள் உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன.வேளாண் அலுவலர்கள் ஒவ்வொரு காய்க்கும் உரிய விலையை குறிப்பிட்ட கடையில் எழுதிப் போட்டு விடுகின்றனர். அதனால் காய்கறியைக் கொடுத்துவிட்டு தினந்தோறும் காசு பார்க்கிறார்கள் விவசாயிகள். இப்போது புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் காய்கறி சாகுபடிக்காக சிறப்பு வயல்வெளி பள்ளியைத் தொடங்கி விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.இந்த நிலையத்தின் பூச்சியல் கட்டுப்பாட்டு நிபுணர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், ""புதுச்சேரியில் திருக்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், மதகடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லூர், காட்டேரிக்குப்பம், கீழ்அஹ்ரகாரம், அரியாங்குப்பம், மணவெளி, பூரணாங்குப்பம் ஓடைவெளி, தேங்காய்த்திட்டு, நாணமேடு உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.நிறைய பேர் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ளது பூரணாங்குப்பம் பகுதி விவசாயிகள். இங்கு மட்டும் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் நாட்டுக் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன'' என்றார்.நல்ல லாபம்!புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதி விவசாயிகளிடம் காய்கறி சாகுபடி முறை எப்படி இருக்கிறது என்று கேட்டோம்.விவசாயி தெ. ஆறுமுகம் (70) கூறுகையில், இப்போது சிறிய இடத்தில்தான் புடலங்காய் சாகுபடி செய்துள்ளேன். இன்றைய காலக்கட்டத்தில் காய்கறி சாகுபடிதான் லாபகரமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஒரு பகுதியில் மணிலா சாகுபடி செய்துள்ளேன். அதற்குக் கூலியாள்களுக்கு அதிகமாக செலவாகிறது. இனிமேல் அந்தச் சாகுபடியை நிறுத்திவிட்டு முழுவதும் காய்கறி சாகுபடியில்தான் ஈடுபடுவேன். காய்கறிகளை அறுவடை செய்வதில் பாதி வேலையை எங்கள் குடும்பத்தில் இருப்பவர்களே செய்து விடுவார்கள் என்றார்.விவசாயி நாராயணன் (54) கூறுகையில், புடலங்காய், பாகற்காய் போன்ற சாகுபடிக்கு பந்தல் போடுவதற்குதான் அதிகமாகச் செலவாகிறது. மற்றபடி அதிகம் செலவில்லை. விவசாயத்தில் இந்தக் காலக்கட்டத்தில் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் காய்கறி சாகுபடிதான் உகந்தது. பீர்க்கங்காய், வெள்ளரி, புடலங்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளைச் சாகுபடி செய்கிறோம். புதுச்சேரி அரசு காய்கறி சாகுபடிக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அதனால் எங்களின் காய்கறிகளை உழவர் சந்தையில்தான் விற்பனை செய்து வருகிறோம். நான் பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதில்லை என்றார்.விவசாயி தெ. சுப்பிரமணி (58) கூறுகையில், இந்த ஆண்டு கத்தரிக்காய்க்கு நல்ல விலை கிடைத்தது. கத்தரிகாய் ஓராண்டு பயிர். எந்த நேரத்துக்கு எந்த காய்கறி சாகுபடி செய்யலாம் என்ற நுணக்கத்தை பார்த்துதான் பயிர் செய்வோம். அப்படி செய்வதால் காய்கறியில் நல்ல லாபம் கிடைக்கிறது. உழவர் சந்தைக்கு நானே எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகிறேன். இதனால் இன்னும் கூடுதல் லாபம் எனக்குக் கிடைத்து வருகிறது என்றார்.நல்ல "ஐடியா'விவசாயி மா. கிருஷ்ணமூர்த்தி (30) சொல்லும் ஒரு வித்தியாசமான விவசாய சாகுபடி உத்தியைக் கடைப்பிடித்தால் மேலும் காசு கொழிக்க முடியும். அவர் சொல்வது:- விநாயகர் சதுர்த்தியைக் கருத்தில் கொண்டு கம்பு, கேழ்வரகு சாகுபடி செய்வேன். அந்த பூஜைக்கு கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சாமிக்குப் படைப்பதற்காக நகரப் பகுதியில் அதிக அளவில் மக்கள் காசு கொடுத்து வாங்கிச் செல்வார்கள். கம்பு, கேழ்வரகு சாகுபடியில் கதிர்களை நசுக்கி நாம் காசு பார்ப்பதைக் காட்டிலும் கதிராகவே விநாயகர் சதுர்த்தி பூஜையின்போது வியாபாரிகளிடம் விற்றுவிட்டால் 2 மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார். மொத்தத்தில் காலத்துக்குத் தகுந்தமாதிரி காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல காலம் நடக்கிறது.
குறிச்சொற்கள்: காய்கறியில் "காசு பார்க்கும்' விவசாயிகள், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது