கடலூர் மாவட்டத்தில் வீழ்ச்சியை சந்திக்கும் விவசாயம்
10:58 PM கடலூர் மாவட்டத்தில் வீழ்ச்சியை சந்திக்கும் விவசாயம், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
மின்வெட்டு, நியாயமான விலை கிடைக்காமை, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைதல் உள்ளிட்ட காரணங்களால், கடலூர் மாவட்டத்தில் விவசாயம் வீழ்ச்சியுறத் தொடங்கி இருக்கிறது.கடலூர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் 3 லட்சம் ஏக்கரில் நெல், 1.15 லட்சம் ஏக்கரில் கரும்பு, 15 ஆயிரம் ஏக்கரில் வாழை, 15 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு, 1.25 லட்சம் ஏக்கரில் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள், 35 ஆயிரம் ஏக்கரில் முந்திரி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.கடந்த 5 ஆண்டுகளில் மேற்கண்ட பயிர்களின் சாகுபடி பரப்பளவு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.இந்த ஆண்டு நெல் பயிரிடும் பரப்பளவு 2.5 லட்சம் ஏக்கராகவும், கரும்பு 75 ஆயிரம் ஏக்கராகவும், உளுந்து மற்றும் பயறு வகைகள் 70 ஆயிரம் ஏக்கராகவும், வாழை 10 ஆயிரம் ஏக்கராகவும் மரவள்ளிக் கிழங்கு 3 ஆயிரம் ஏக்கராகவும் குறைந்து விட்டது.கடற்கரை கிராமங்களில் கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் உவர் நீராகிக் கொண்டு வருகிறது. இறால் பண்ணைகளால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு விட்டன.அதே நேரத்தில் கடற்கரை கிராமங்கள் ரசாயனத் தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தொழிற்சாலை வளாகங்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.தொடர்ந்து ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து கொண்டே இருக்கிறது. மாவட்டத்தின் மையப்பகுதிகளான பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்கள் என்.எல்.சி. சுரங்கங்களால் உறிஞ்சப்படும் கோடிக்கணக்கான லிட்டர் நீரால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது.வறண்ட மேற்கு வட்டங்களான திட்டக்குடி மற்றும் விருத்தாசலத்தில் 30 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 70 அடிக்கும் கீழே போய்விட்டது.விருத்தாசலம், திட்டக்குடி வட்டங்களில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. வெள்ளாற்றில் 2-வது ஆண்டாக இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை.இதனால் ஆயிரக்கணக்கான ஆழ்குழாய்க் கிணறுகள் வறண்டு கிடக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அறிவிக்கப்படாத மின் வெட்டு விவசாயிகளை வதைத்துக் கொண்டு இருக்கிறது.விவசாயத்துக்கு 14 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் 10 மணி நேரம் வழங்குவதாக அறிவித்து, 7 மணி நேரம்தான் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.சோதனை அறுவடைஇந்த ஆண்டு சம்பா பருவத்தில் அறுவடையின்போது, தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் சோதனை அறுவடை நடத்தப்பட்டது.இதில் காவிரி பாசனப் பகுதிகளான குமராட்சியில் ஹெக்டேருக்கு 2,473 கிலோவும், புத்தூரில் 2,268 கிலோவும், திருவக்குளத்தில் 2,927 கிலோவும் மகசூல் கிடைத்ததாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.ஆழ்குழாய் கிணற்றுப் பாசன பகுதிகளான ஒரத்தூரில் 6,441 கிலோவும், கடலூரில் 5,733 கிலோவும், மங்களூரில் 5,122 கிலோவும் மகசூல் கிடைத்து உள்ளது. சராசரி விளைச்சலாக இருந்தால், ஹெக்டேருக்கு 6,500 கிலோ நெல் கிடைக்க வேண்டும் என்கிறார் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்.தற்போதைய பயிர் காப்பீட்டுத் திட்டத்தால் பயன் இல்லை. தனிநபர் அல்லது கிராம அடிப்படையில் பாதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்துப் பயிர்களுக்கும் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்றும் ரவீந்திரன் தெரிவித்தார்.""உரிய விலை கிடைக்காதது, மின் வெட்டு மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிலையங்களால் உயர் ரகக் கரும்புகளை அறிமுகம் செய்யாதது, விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளின் ஆதரவற்ற நிலை காரணமாக கரும்புப் பயிரிடும் பரப்பளவு குறைந்ததுடன், கரும்பு மகசூல் ஏக்கருக்கு 40.5 டன்னாக இருந்தது 38 டன்னாகக் குறைந்து விட்டதாக'' கரும்பு விவசாயியும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில பொதுச் செயலருமான விருத்தகிரி தெரிவிக்கிறார்.திட்டக்குடி விருத்தாசாலம் தாலுகாக்களில் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு, வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் ஆழ்குழாய்க் கிணறுகள் பல வறண்டதாலும், மின் வெட்டு காரணமாகவும், பருத்தி, மக்காச் சோளம், மரவள்ளி, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி பரப்பளவு குறைந்து, மகசூலும் வீழ்ந்து விட்டதாகக் கூறுகிறார், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன்.வறண்டப் பகுதிகளில் மருந்துப் பயிர்கள் சாகுபடி செய்தால் நல்ல வருவாய் கிடைக்கிறது. ஆனால் வேளாண்துறை போதிய ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்காததால், விவசாயிகள் துணிவுடன் மாற்றுப் பயிர்களுக்கு மாற முன்வர இயலவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
குறிச்சொற்கள்: கடலூர் மாவட்டத்தில் வீழ்ச்சியை சந்திக்கும் விவசாயம், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது