வறட்சியால் கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
7:09 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, வறட்சியால் கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள் 0 கருத்துரைகள் Admin
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு எதிர்பார்த்த வகையில் பருவ மழை இல்லாததால், ஏரி, குளம், கிணறுகளில் நீர் மட்டம் கிடு கிடுவென குறைந்து விட்டன.தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வருகின்றன. விளைந்த மஞ்சளை அறுவடை செய்யவும், கதிர் விடும் தருணத்தில் உள்ள நெல்லை காப்பாற்றவும் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகினர். அதற்காக தண்ணீர் இன்றி வறண்ட கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழைய கிணறுகளை தூர் எடுத்து, ஆழப்படுத்தியும், புதிய கிணறுகள் தோண்டியும் வருகின்றனர். கிணறுகள் தூர் வாரப்படுவதால் அடுத்த ஆண்டு வரும் மழையினால் தேவையான தண்ணீர் சேமிக்க முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர். பள்ளித்தெருப்பட்டி, பாறையூர், கோம்பைக்காடு, பெரமனூர், மல்லூர் உள்ளிட்ட இடங்களில் கிணறுகள் ஆழப்படுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. கிணறுகளில் இருந்து மண் எடுக்கும் கிரேன், பாறைகளை வெடி வைத்து உடைக்க தேவைப்படும் ஏர் கம்ப்ரஸர் வண்டி ஆகியவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பனமரத்துப்பட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆயிரம் அடி வரையில் போர்வெல் போட்டும் சொட்டு தண்ணீர் கிடைக்காமல் வெறும் புகை மட்டுமே மிஞ்சுகிறது. கிணறு அதிக பரப்பளவில் இருப்பதால், அதை ஆழப்படுத்தினால் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு தோண்டி வருகிறோம். ஒரு மெட் (6 அடி) ஆழம் கிணறு தோண்ட கூலி ஆட்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை கூலி கொடுக்கப்படுகிறது. கிணறு வெட்ட கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிணறு வெட்ட ஆட்களை தேடி பிடித்து அட்வான்ஸ் கொடுத்து காத்திருக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, வறட்சியால் கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது