கருகும் பூந்தோட்டம்; விவசாயிகள் கண்ணீர் : கடும் வறட்சி எதிரொலி
7:08 AM கருகும் பூந்தோட்டம்; விவசாயிகள் கண்ணீர் : கடும் வறட்சி எதிரொலி, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
ஆண்டு முழுவதும் வருமானம் அள்ளி கொடுக்கும் அரளிப்பூ, ரோஜா, குண்டு மல்லி செடிகள், கோடை வறட்சியால் காய்ந்த சருகாக மாறி வருகின்றன. பல ஆண்டாக பராமரித்து வந்த செடிகள், செத்து மடிவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், கம்மாளப்பட்டி, குரால்நத்தம்,சாமகுட்டப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, அடிக்கரை, பள்ளித்தெருப்பட்டி, பெரமனூர், காளியாகோவில் புதூர், திப்பம்பட்டி, குள்ளம்பட்டி, பனமரத்துப்பட்டியில் 2,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் அரளிப்பூ, ரோஜா, குண்டு மல்லி செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தினமும் பத்து டன் அரளிப்பூ, இரண்டு டன் குண்டு மல்லி, ஒரு டன் ரோஜா அறுவடை செய்து பெங்களுரூ, சென்னை,சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. அரளி, குண்டு மல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் பறிக்கும் தொழில் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் பூ செடிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் வருவாய் அள்ளி கொடுத்த அரளி, ரோஜா, குண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட செடிகள் வறட்சியால் காய்ந்து சருகாக மாறி வருகின்றன. சாமகுட்டப்பட்டி, அடிக்கரை, நூலத்து கோம்பை, காளியாகோவில்புதூர், அடிமலைப்பட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் அரளிப்பூ செடிகள் தண்ணீர் இன்றி வெயிலில் கருகி செத்து மடிந்துள்ளது. பனமரத்துப்பட்டி, ஆத்துமேடு, ஜல்லூத்துப்பட்டி, நடுப்பட்டி, அடிக்கரை கோம்பைக்காடு, பள்ளித்தெருப்பட்டி, களரம்பட்டி, பெரமனூர், நல்லியாம்புதூர் உள்ளிட்ட பகுதியில் குண்டுமல்லி,ரோஜா உள்ளிட்ட செடிகள் சுட்டெரிக்கும் வெயிலில் கருகி பரிதாபமாக காட்சியளிக்கின்றன. தினசரி வருவாய் என்பதால், பெரும்பாலான விவசாயிகள், மற்ற பயிர் சாகுபடியை விட்டு, சில ஆண்டுக்கு முன் அரளி, குண்டுமல்லி சாகுபடிக்கு மாறி விட்டனர். ஆனால், தற்போது வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பூச்செடிகள் வெயிலில் கருவதால், அவற்றை வாழ்க்கை நடத்திய விவசாயிகள், கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது: அரளிப்பூ, குண்டுமல்லி,ரோஜா ஆகிய செடிகள் ஒரு முறை நடவு செய்தால், தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். அரளி, குண்டுமல்லி செடிகள் ஆண்டு முழுவதும் பூ உற்பத்தி இருக்கும். பூக்களை நாள்தோறும் பறித்து விற்பனைக்கு கொண்டு செல்வதால், தினமும் வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், வறட்சி காரணமாக கஷ்டப்பட்டு பராமரித்து, பாதுகாத்து வளர்த்த அரளி, குண்டு மல்லி,ரோஜா செடிகள் வெயிலில் கருகி செத்து மடிகிறது. பூ செடிகள் மடிவதை காண மிகவும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குறிச்சொற்கள்: கருகும் பூந்தோட்டம்; விவசாயிகள் கண்ணீர் : கடும் வறட்சி எதிரொலி, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது