வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் வெண்பாகற்காய்
9:49 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் வெண்பாகற்காய் 0 கருத்துரைகள் Admin
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு அதிகளவில் வெண்பாகற்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, பூசாரிகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முன்பு திராட்சை விவசாயம் செய்து வந்தனர். தற்போது, திராட்சை விவசாயம் ஓய்ந்துள்ளதால், திராட்சை விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பந்தல் வீணாகாத வகையில், அதே பந்தலில் வெண் பாகற்காய், பச்சை பாகற்காய், புடலை, மற்றும் கோவைக்காய் போன்ற கொடிகளை படரவிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் புடலை உள்ளூர் சந்தைகளிலும், கோவைக்காய் மற்றும் பச்சை பாகற்காய் கேரளம் போன்ற வெளி மாநிலத்திற்கும் வெண்பாகற்காய் சவூதி அரேபியா, துபை போன்ற வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் வெண் பாகற்காயை, மொத்த வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் விளை நிலத்திற்கே வந்து கொள்முதல் செய்து, 10 கிலோ அடங்கிய பெட்டிகளில் பேக்கிங் செய்து, நேரடியாக கொச்சி, திருவனந்தபுரம் கொண்டு செல்கின்றனர். பின்னர், அங்கிருந்து விமானம் மூலமும், கப்பல் மூலமாகவும் துபை, சவூதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு வெண் பாகற்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் வெண்பாகற்காய் மருத்துவக் குணம் நிறைந்துள்ளதாகவும், சத்து நிறைந்ததாகவும் உள்ளதால் வெளிநாடுகளில் இவற்றை விரும்பி உண்ணுகின்றனர். ஆகவே இப்பகுதி விவசாயிகள் போதுமான லாபம் கிடைப்பதால் வெண் பாகற்காய் விவசாயத்தில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆரம்பநிலையில், பாகற்காய்க் கொடியைப் படரவிட்டால், 50 நாள்களிலிருந்து 5 மாதங்கள் வரை வாரம் இருமுறை காய்ப் பறிப்பு இருந்து கொண்டே இருக்கும். தற்பொழுது பாகற்காய் கிலோ ரூ. 8 முதல் ரூ.10 வரை விவசாயிகளின் விளை நிலங்களிலேயே நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் முழு ஆர்வத்துடன் பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி அணைப்பட்டியைச் சேர்ந்த முத்து, அண்ணாத்துரை கூறும்போது: கடந்த 20 ஆண்டுகளாக திராட்சை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு திராட்சை விவசாயம் ஓய்ந்துவிடும். அதன்பின்பு திராட்சைக்காக அமைக்கப்பட்ட பந்தல்கள் அப்புறப்படுத்த முடியாத சூழ்நிலையில், கொடிகளின் மூலம் பலன் தரும் பாவை, கோவை, புடலை போன்ற விவசாயத்தில் இப்பகுதியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறோம். இங்கு விளைவிக்கும் வெண் மற்றும் பச்சை பாகற்காய் அதிகளவு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் போதுமான லாபம் கிடைக்கிறது என்றனர். பாகற்காய் ஏற்றுமதி செய்யும் அனீஸ் கூறியதாவது: அரேபிய நாடுகளுக்கு பாகற்காய் அதிகளவு தேவைப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு வெண் பாகற்காய்க்கு கிராக்கி இருப்பதால், வாரம்தோறும் விவசாயிகளிடமிருந்து அதிகளவு வாங்கி ஏற்றுமதி செய்து வருவதாகத் தெரிவித்தார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் வெண்பாகற்காய்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது