இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

இயற்கையை மாற்றுவதால் நிலை குலையுது மாவட்டம்! இயற்கை வேளாண் விஞ்ஞானி கவலை



""இயற்கையின் தன்மையை மாற்றும் போது தான் பேரிடர் ஏற்படுகிறது,'' என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முத்தமிழ்ப் பேரவை சார்பில், இலக்கிய வார விழா நேற்று துவக்கப்பட்டது. தமிழ் துறை பேராசிரியை டாக்டர் சுஜாதா வரவேற்றார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், சிறப்பு அழைப்பாளராக பேசியதாவது:அறிவு, ஆற்றலை உரிய சமயத்தில் பயன்படுத்தினால் தான் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இயற்கையை புரிந்து நடந்து கொள்ள மனிதன் தவறி விட்டான். காடுகள் மற்றும் மலைகள் நிறைந்த பகுதியை, அதன் தன்மைக்கேற்ப பார்க்க வேண்டும்; இக்கருத்தை, கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் வலியுறுத்தினார்.இயற்கையின் தன்மையை மாற்றும் போது, சில எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன; இதற்கு உதாரணம் தான் சமீபத்தில் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு. நீலகிரியை பொருத்தவரை, மலை மாவட்டத்துக்குரிய தன்மை மாற்றப்பட்டு விட்டது; அதனால் தான் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு, மனிதன் மற்றும் உயிரினங்களின் வாழ்விடங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் காடுகள், சோலைகள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்கள், விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. விவசாய நிலங்களுக்குள் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து புகை வெளியேற்றப்படுகிறது; சுற்றுச்சூழல் மாசடைகிறது; பருவமழை பொய்க்கிறது. முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர்; பசுமை பாதுகாக்கப்பட்டது; குறிப்பிட்ட காலத்தில் பருவ மழை பெய்தது.தற்போது அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து விட்டது; அதற்கேற்ப பல ஆபத்துகளும் வந்து விட்டன. உலகில் 100 கோடி பேர் பசியோடு படுக்கைக்கு செல்கின்றனர்; 700 கோடி பேருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "வரும் 2015ம் ஆண்டுக்குள் பசியை பாதியளவு தீர்த்து விடுவோம்' என அரசு கூறுகிறது. பசுமைப் புரட்சியால் விளைப் பொருட்களின் உற்பத்தி தேவைக்கேற்ப இருந்தது. 1960க்கு பின், விவசாயம், வியாபாரமாக மாறிவிட்டது. நவீன பயோ டெக்னாலஜி என்ற பெயரில் விளைப்பொருட்கள் விஷம் கலந்த பொருட்களாக மாற்றப்படுகின்றன.தக்காளி விதையில், தவளையின் உடம்பில் உள்ள ஒருவித கிருமியை செலுத்தி உற்பத்தி செய்கின்றனர். அந்த விஷக்கிருமி, தக்காளியை புழுக்கள் தாக்காமல் தடுக்கின்றன; அதே தக்காளியை மனிதன் உட்கொள்ளும் போது, அந்த விஷக்கிருமி மனிதனை பாதிக்கிறது. இதே போன்று கத்தரிக்காய், உருளைக் கிழங்கு போன்ற விவசாயப் பொருட்களை பயோ டெக்னாலஜி முறையில் உற்பத்தி செய்ய திட்டங்கள் தயாராகி வருகின்றன; இதற்கு எதிராக மக்கள் ஒன்று சேர வேண்டும்.இறக்குமதி செய்யப்படும் ரசாயன உரங்கள் மண்ணில் கொட்டப்படுவதாலும், விளை நிலங்களில் கட்டடங்கள் கட்டப்படுவதாலும், மண் வளத்தை பாதுகாக்கும் புழு, பூச்சி போன்ற உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன; மண் வளம் பாதிக்கிறது. இயற்கையை நேசிக்க வேண்டும்; அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும்; மரம், செடி, கொடி உட்பட இயற்கையோடு இணைந்து வாழ்வது தான் சிறந்தது. பெண்களின் அறிவு, படைப்பாற்றல் திறன் சமுதாயத்தை மாற்றியமைக்கும் சக்தி கொண்டது; எனவே, பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும். இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார். பின், மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. மரியகொரட்டி மார்ட்டிஸ் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் மலர்விழி முன்னிலை வகித்தார். காந்தி கிராம கிராமியப் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் மார்க்கண்டன் பேசினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment