மஞ்சள் விலை ஒரு வாரத்தில் ரூ.1,700 உயர்வு : அறுவடை வேளையில் அதிக விலையால் மகிழ்ச்சி
7:29 AM 700 உயர்வு, சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் விலை ஒரு வாரத்தில் ரூ.1 0 கருத்துரைகள் Admin
மஞ்சள் வரத்து குறைந்ததுடன், "ஆன் லைன்' வர்த்தகத்தால் மஞ்சள் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. சென்ற ஒரு வாரத்தில் 1,700 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தீவிர அறுவடை நடக்கும் வேளையில் மஞ்சள் விலை உயர்ந்து வருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய்கள் பாசனப்பகுதியில் விவசாயிகள் அதிகளவு மஞ்சள் சாகுபடி செய்கின்றனர். ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு சந்தைகள் தவிர, 150க்கும் மேற்பட்ட தனியார் குடோன்கள் உள்ளன. நடப்பாண்டு வரலாறு காணாத வகையில் ஒரு குவிண்டால் மஞ்சள் 13 ஆயிரத்து 700 வரை விலை போனதால், நெல், கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கூட மஞ்சள் சாகுபடிக்கு மாறிவிட்டனர். இருப்பினும், நடப்பாண்டில் போதிய மழை இல்லாத காரணத்தால், மஞ்சள் உற்பத்தி வெகுவாக குறைந்தது. பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி முதல் அறுவடையாகும் புதிய மஞ்சள் சந்தைக்கு வரத்தாகிறது. தற்போது அதிகளவு மஞ்சள் வரத்தாகிறது. இந்நிலை ஏப்ரல் வரை நீடிக்கும். புதிய மஞ்சள் வரத்து ஆரம்பித்ததும் ஃபிப்ரவரியில் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஒரு வாரமாக விலை நன்கு உயர்ந்து வருகிறது. மார்ச் 8ம் தேதி வெளி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 6,859 முதல் பத்தாயிரத்து 389 ரூபாய் வரையும், கிழங்கு 6,166 முதல் 9,686 ரூபாய் வரையும் விலை போனது. மார்ச் 9ம் தேதி வெளி மார்க்கெட்டில் விரலி மஞ்சள் 8,900 - 11 ஆயிரத்து 366 வரையும், கிழங்கு மஞ்சள் 8,510 - பத்தாயிரத்து 186 வரையும் விலை உயர்ந்தது. 10ம் தேதி விரலி 6,599 முதல் பத்தாயிரத்து 865 ரூபாய், கிழங்கு 6,499 முதல் 9,899 ரூபாய் வரை விலை சிறிது சரிந்தது. மார்ச் 11ம் தேதி சற்றே விலை உயர்ந்து விரலி 8,100 முதல் பத்தாயிரத்து 902 ரூபாய், கிழங்கு 7,318 முதல் பத்தாயிரத்து 168 ரூபாய் வரை விலை போனது. 12ம் தேதி விரலி 8,200 முதல் 11 ஆயிரத்து 268 ரூபாய், கிழங்கு 8,100 முதல் பத்தாயிரத்து 484 ரூபாய் வரை விலை போனது.
சனி, ஞாயிறு விடுமுறையை அடுத்து நேற்று விரலி 8,019 முதல் 11 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், கிழங்கு 7,199 முதல் 11 ஆயிரத்து 410 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த 8ம் தேதி விலையில் இருந்து நேற்று 1,700 ரூபாய் வரை விலை அதிகம் கிடைத்தது. விற்பனைக் கூட அதிகாரி ஒருவர் கூறியதாவது: மஞ்சள் வரத்து குறைவாக உள்ளது. "ஆன்லைன்' மற்றும் பெரியமாரியம்மன் கோவில் பண்டிகை விடுமுறை வருவதால், ஒரு வாரமாக விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நாளை (இன்று) விலை 12 ஆயிரத்தை தாண்டிவிடும் என எதிர்பார்க்கிறோம். வரும் காலங்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒரு வாரத்துக்கு வரை மஞ்சளுக்கு சராசரியாக 9,500 ரூபாய் வரையே விலை கிடைத்ததால், விவசாயிகள் பலரும் அதிக விலையை எதிர்பார்த்து, அறுவடை செய்த மஞ்சளை வீடுகளில் சேமித்து வைத்துள்ளனர். இதனால், சந்தைக்கு வரத்து பெரிதும் குறைந்து விட்டது. இதுவும், விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
குறிச்சொற்கள்: 700 உயர்வு, சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் விலை ஒரு வாரத்தில் ரூ.1
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது