இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பெரியகுளம் பகுதியில் மாம்பழம் விளைச்சல் பாதிப்பு : பருவமழை குறைந்ததால் விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் பருவமழை குறைந்ததால், பெரியகுளம் பகுதியில் மாம்பழம் விளைச் சல் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி பகுதிகளுக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் மா விவசாயம் நடக்கிறது. காசா லட்டு, கல்லாமை, சவுந்தரம், மகரவல்லி, சேலம் குண்டு, காளைப்பாடி, செந்தூரம், காதரு, மல்கோவா, கிரேப் மற்றும் பல்வேறு நாட்டு மாம்பழங்களும் விளைச்சலாகிறது. நூறாண்டுகளுக்கு மேலாக கொடைக்கானல் மலையடிவாரத்தில், முருகமலை வாலாட்டியிலிருந்து கோயில்காடு வரையிலான 20 கி.மீ.,க்கு 5 கி.மீ., சுற்றளவில் மாந்தோப்புகள் இருக்கின்றன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாம்பழம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக நல்ல விளைச்சல் கண்டு வந்த இப்பகுதியில், நடப்பு ஆண்டில் வறண்ட நிலை காணப்படுகிறது. வழக்கமாக செப்., முதல் டிச., வரையிலான பருவமழை ஜன.,ல் பூப்பூத்து, நடப்பு மாதத்தில் "கடி' பிஞ்சு நிலையில் காய்கள் இருந்திருக்க வேண்டும். மழை குறைந்ததால், தோப்பு பகுதிகள் வறண்டு பூச்சி தாக்குதலில் சிக்கியுள்ளன. பழனி, நத்தம் பகுதிகளில் மரங்களில் "பிஞ்சு'கள் வந்துள்ள நிலையில், இப்பகுதியிலுள்ள மரங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பூக்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மருந்து தெளித்து வருகின்றனர். இனிமேல் பிஞ்சு விட்டு, மாம்பழம் உற்பத்திக்கு மூன்று மாதங்களுக்கு மேலாகும். அத்துடன், பெரும்பாலான மரங்கள் காய்ப்பு திறன் குறைந்து காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலரது கருத்துக்கள் வருமாறு:உசேன்கான்(கீழவடகரை விவசாயி): மழை குறைந்ததால், கடந்த ஆண்டை விட எனது தோப்பில் 25 சதவீதம் காய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு, பிப்.,ல் "கடி பிஞ்சு' நிலையில் காய்கள் கொத்துக்கொத்தாக தொங்கின. மார்ச் முதல் அறுவடை துவங்கினோம். ஒரு ஏக்கருக்கு 10 டன்கள் வரை மாம்பழம் விளைச்சல் இருந்தது. நல்ல விலையும் கிடைத்தது. இந்த ஆண்டு, பெரும்பாலான மரங்கள் இன்னும் பூக்கவில்லை. பூத்துள்ள ஒன்றிரண்டு மரங்களை காக்க, ஏக்கருக்கு பூச்சி மருந்து, மராமத்து பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
அனைத்து தோப்புகளிலும் இதே நிலை தான். விளைச்சலும் 4ல் ஒரு பங்கு தான் கிடைக்க வாய்ப்புள்ளது. செலவு தொகையாவது கிடைப்பது சந்தேகம். குரங்கு தொல்லை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நல்ல விளைச்சல் இருந்தால், காவலுக்கு ஆட்கள் இருப்பர். குரங்குகளை விரட்டியடித்து விடலாம். விளைச்சல் குறைவதால், குரங்குகளாலும் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பெருமாள்(வடகரை விவசாயி): கடந்த ஆண்டுகளை விட, தற்போது தோப்புகளில் சேதத்தை ஏற்படுத்தி வந்த "ஈ' பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் எட்டுகால் பூச்சி, கத்தாழை பூச்சி போன்ற சில பூச்சி தாக்குதல் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம். பெரும்பாலான மரங்கள் இன்னும் பூக்கவில்லை. ஆண்டுதோறும் 2 லட்சம் டன்கள் வரை மாம்பழம் விளைச்சல் ஆகிய இப்பகுதியில், இந்த ஆண்டு 10ல் ஒரு பங்கு விளைச்சலாகும் நிலை இருக்கிறது. இத்தோப்புகளை நம்பி வாழும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினருக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறக்கூடிய வியாபாரிகள் முதல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டக்கலைத்துறையினர் கவனத்திற்கு: இத்துறை ஆராய்ச்சிக் கல்லூரி அமைந்துள்ள இப்பகுதியில் மா விளைச்சல் பாதிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது, விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள் குழுவினர் உடனடியாக தோப்புகளுக்கு சென்று, மா விளைச்சல் பாதிப்பை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment