இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி. கத்தரிக்கு தமிழகம் எதிர்ப்பு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் (பி.டி. கத்தரிக்காய்) சாகுபடியை தமிழகத்தில் அனுமதிக்கப் போவதில்லை என்று தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் சாகுபடியை அனுமதிக்கலாமா என்பது பற்றி மக்கள் கருத்தறியும் கூட்டம் மத்திய சுற்றுச் சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் பெங்களூரில் சனிக்கிழமை நடந்தது.கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இதுதொடர்பாக மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் எழுதி கருத்து கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். பல மாநிலங்களில் இருந்து கடிதங்கள் வந்திருப்பதாக அவர் கூறினார்.தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி தகவல் வந்ததா என்று நிருபர்கள் கேட்டனர். மாநில அரசின் தலைமைச் செயலாளர் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தக் கத்தரிக்காய் சாகுபடியை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்ற தகவலைத் தெரிவித்தார் என அமைச்சர் கூறினார்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை வணிக ரீதியில் சாகுபடி செய்ய அனுமதிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குழு பரிந்துரை செய்ததில் இருந்தே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.அதனால் மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகுதான் இதுபற்றி முடிவு செய்யப்படும் என அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். அதன்படி கருத்து கேட்பு கூட்டங்கள் நடக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டன.எல்லா மாநிலங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதும், தமிழகத்தில் இதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்பதும் விவசாயிகள், தன்னார்வ அமைப்புகள், இந்திய முறை மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விஷயத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்குமாறு முதல்வர் மு. கருணாநிதி யோசனை கூறியிருந்தார்.இருந்தபோதிலும் தமிழகத்தில் கருத்து கேட்பு கூட்டம் எதற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.மத்திய அரசு ஏற்பாடு செய்யாவிட்டாலும், மாநில அரசே மாவட்டம் தோறும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, மாநிலத்தின் ஒட்டுமொத்த கருத்தை தொகுத்து மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என நிபுணர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதற்கிடையில், விவசாயிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் குழு இரு வாரங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மரபணு மாற்றிய கத்தரிக்காயை அனுமதித்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று விளக்கியது. நீண்ட நேரம் அவர்களின் கருத்துகளை முதல்வர் கேட்டறிந்தார்.குடியரசு நாளன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில், பல இடங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்பட பல மாநிலங்களில் இந்த கத்தரிக்காயை அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பு வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து இன்னும் அறிவிப்பு எதுவும் வரவில்லையே என விவசாய நிபுணர்கள் காத்திருந்தனர்.தமிழகம் இதை எதிர்ப்பதாக, பெங்களூரில் நடந்த கூட்டத்தில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் நிலைப்பாடு புதன்கிழமை (பிப்ரவரி 10) மதியம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment