இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பருப்பு சாகுபடி பெருக தீவிர திட்டம்: பிரதமர் அறிவிப்பு

நாட்டில் பருப்பு சாகுபடி பெருக தேசிய அளவில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் பேசியதன் சுருக்கம்:நாட்டின் பருப்பு சாகுபடியில் பல ஆண்டுகளாக தேக்க நிலை நிலவுகிறது. பருப்பு உற்பத்தி தற்போது 1.50 கோடி டன்னாக உள்ளது. ஆனால் தேவையோ 1.80 கோடி டன்னாகும்.உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே பற்றாக்குறை தொடர்ந்து நிலவுகிறது. இதைப் போக்க தேசிய அளவில் பருப்பு சாகுபடியை அதிகரிக்க திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். பருப்பு உற்பத்தி அதிகரிக்காததால் கடந்த சில ஆண்டுகளில் இவற்றின் விலை மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்டவற்றின் விலை கிலோ ரூ. 90-க்கும் அதிகமாக விற்பனையாகிறது. ஆனால் உள்நாட்டில் சாகுபடி செய்யப்படும் கொண்டைக்கடலை மற்றும் இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் பட்டாணி உள்ளிட்டவற்றின் விலை முறையே கிலோ ரூ.36 மற்றும் ரூ.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தட்டுப்பாட்டை போக்குவதற்காக அரசு உள்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்கிறது. துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றுக்கு ஓரளவு மாற்றாக இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் பட்டாணி உள்ளது.பருப்பு வகைகளின் விலையை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிப்பதோடு இவை நுகர்வோருக்குக் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் 30 லட்சம் டன் முதல் 40 லட்சம் டன் வரை பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு உச்சத்தை எட்டிவிட்டது. இனிமேலும் இந்நிலை தொடராது. அடுத்த சில வாரங்களில் இவற்றின் விலை குறையும். இதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளன.பதுக்கல்காரர்களுக்கு எச்சரிக்கை: அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சாகுபடி அதிகரித்துள்ளதோடு, உணவுப் பொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க சங்கிலித் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விலை குறைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன. அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை:மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் இடையே பெருமளவு வித்தியாசம் காணப்படுகிறது. சில்லறை வணிகத்தில் அதிக போட்டியை ஏற்படுத்துவதன் மூலமே நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கச் செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமே சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களுக்கோ, அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கோ அனுமதி அளிக்கப்பட மாட்டாது.பலமுனை வரிவிதிப்பு: பொருள்களின் மீது விதிக்கப்படும் பலமுனை வரிகளும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். மாநில வரி மற்றும் உள்ளூர் வரிகளால் பொருளின் விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே பலமுனை வரிப் பிரச்னையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.சர்க்கரை விலை: சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த அரசு கச்சா சர்க்கரை இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கியுள்ளது. மாநில அரசுகள் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சர்க்கரை சுத்திகரிப்புக்கு உதவினால் சர்க்கரை விலை விரைவில் குறையும். சர்க்கரை தட்டுப்பாட்டை போக்க குறுகிய கால கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.மாநில அரசுகளின் ஆர்வமின்மை: விலையைக் கட்டுப்படுத்த பொதுச் சந்தை விநியோகத்துக்கு 30 லட்சம் டன் அரிசி, கோதுமையை விடுவிக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால் மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசுகள் இவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.சர்வதேச அளவில் காணப்பட்ட விலைவாசி உயர்வு மற்றும் பருவ மழை பொய்த்துப் போனது ஆகிய சூழ்நிலையிலும் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்குதல் மற்றும் தாராளமாக உணவுப் பொருள் இறக்குமதிக்கு அனுமதிப்பது மற்றும் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.ரபி பருவ சாகுபடி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் விலைவாசி குறையும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment