ஒட்டன்சத்திரம் பகுதியில் உற்பத்தி அதிகரிப்பால் புகையிலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
7:24 PM உற்பத்தி அதிகரிப்பால் புகையிலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் புகையிலை உற்பத்தி அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள குள்ளவீரன்பட்டி, அம்பிளிக்கை, சிந்தலைப்பட்டி, ஒடைப்பட்டி, குத்திலுப்பை, ஜ.வாடிப்பட்டி, கே.கீரனூர், சீரங்கவுண்டன்புதூர், தங்கச்சியம்மாபட்டி, வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி, சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் புகையிலை பயிரிட்டுள்ளனர். இதனால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. புகையிலையை விவசாயம் செய்த இடத்திற்கே வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு பச்சைச் செடியை (கட்டை) வியாபாரிகள் 7 முதல் 8 ரூபாய்க்கு வாங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு ஒரு புகையிலைச் செடியை ரூ.2.50 முதல் 4 வரை கொள்முதல் செய்கின்றனர். உற்பத்திச் செலவிற்குக்கூட விற்க முடியவில்லை என்று சில விவசாயிகள் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இது குறித்து அம்பிளிக்கையைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கூறியதாவது: வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆயிரம் புகையிலை நாத்து ரூ.300 விலை கொடுத்து வாங்கி வந்து அதை நடவு செய்தேன். நன்கு பராமரித்து உரம், மருந்து அடித்து நல்ல முறையில் விளைச்சல் அடைய அரும்பாடுபட்டோம். கடந்த ஆண்டு நல்ல விலை இருந்ததால் நானும் புகையிலை விவசாயம் செய்தேன். ஆனால் வியாபாரிகள் கூட்டாகச் சேர்ந்து உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவாகத் தான் வாங்குவோம் என்று கூறி ஒரு புகையிலைச் செடியை ரூ.2.50 முதல் 4 வரை தான் கொள்முதல் செய்கின்றனர். இதனால் எங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இரவு, பகலாகத் தண்ணீர் பாய்ச்சி, வேலைக்கு ஆள்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். நல்ல விலை கிடைத்து இருந்தால் கூட எங்களுடைய கவலை எல்லாம் மறந்து போய் இருக்கும். எங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்குமா? என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
குறிச்சொற்கள்: உற்பத்தி அதிகரிப்பால் புகையிலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது