விவசாயத்தை நம்பியே நாடு உள்ளது
7:23 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, விவசாயத்தை நம்பியே நாடு உள்ளது 0 கருத்துரைகள் Admin
விவசாயத்தை நம்பியே நாடு உள்ளது. எனவே விவசாயிகள் தயங்க வேண்டியதில்லை என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தெரிவித்தார். குபோடா நிறுவனம் சார்பில் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள கரம்பையில் வியாழக்கிழமை நவீன இயந்திரங்கள் கண்காட்சி மற்றும் செயல் விளக்க முகாம் நடைபெற்றது. முகாமினை தொடங்கி வைத்த தமிழக சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் பேசியதாவது: அம்பாசமுத்திரம் பகுதியில் விவசாயம் அதிகளவில் செய்து வருகின்றனர். விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நவீன இயந்திரங்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. விவசாயத்தை பிரதானமாக செய்து வருபவர்கள் தயங்க தேவையில்லை. உலகில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் விவசாயத்தை நம்பியே நாடு உள்ளது. எனவே எதிர்காலத்தில் விவசாயம் இப்போதுள்ளதை விட செழித்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் தொழில்வளம் பெருகி வருகிறது. இங்குள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தான் அம்பாசமுத்திரம் அருகே கரும்பு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. நெல், வாழை பயிருக்கு மாற்றாக கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையும் வகையில் கரும்பு ஆலை கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழக அரசு பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனவே விவசாயிகள் அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற வேண்டும் என்றார் அவர். முகாமில், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் இரா. சிவகுருநாதன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன், சேரன்மகாதேவி பேரூராட்சித் தலைவர் ச. பாபநாசம், வேளாண்துறை இணை இயக்குநர் எஸ். தேவசகாயம், வேளாண் பொறியியல்துறை துணை இயக்குநர் கே. தமிழ்செல்வன், பொதுப்பணித்துறை உயர்நிலைக் குழு உறுப்பினர் பொ. கிட்டு, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என்.எஸ். ஆறுமுகம் ஆகியோர் பேசினர். குபோடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹயாசி, நகர்மன்றத் தலைவர்கள் கே.கே.சி. பிரபாகரன், எஸ்.பி. மாரியப்பன், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ப. கணபதி, பேரூராட்சி துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குநர் சி. மகாலிங்கம், நீர்பாசன சங்கத் தலைவர் ரா. சுப்பையா, நகர்மன்ற துணைத் தலைவர் ரா. அந்தோணிச்சாமி, ஊராட்சித் தலைவர் ஆர். நம்பி மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து கரம்பை வயலில் நவீன இயந்திரம் மூலம் நெற்பயிர் நடவு செய்வதை பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் பார்வையிட்டார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட குபோடா விற்பனையாளர் வி.சுரேஷ்வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, விவசாயத்தை நம்பியே நாடு உள்ளது
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது