மரபீனி கத்தரிக்கு மாற்றாக அண்ணாமலை கத்தரி
5:50 AM
சிறப்பு,
செய்திகள்,
தலைப்பு
Admin
சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் விவசாயி பானுசந்தர் தோட்டத்தில் மகசூல் செய்யப்பட்ட அண்ணாமலை கத்தரி. ------------------------------------------------------------------------------------------------------
மரபீனி கத்தரிக்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மரபீனி கத்தரியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து விவசாயிகளின் தோட்டங்களில் சாகுபடி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறை உருவாக்கியுள்ள அதிக மகசூல் தரும் அண்ணாமலை கத்தரி, மரபீனி கத்தரிக்கு நல்ல மாற்றாக இருக்கும் என அண்ணாமலைப் பல்கலை. விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மற்றும் இயற்கை சார்ந்த வேளாண்மை தொழில்நுட்பங்கள் கொண்டு அதிக உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் அதிக மகசூல் கொண்டு உருவாக்கப்பட்ட அண்ணாமலை கத்தரி, மரபீனி கத்தரிக்கு நல்ல மாற்றாக இருக்கும் என ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.
அண்ணாமலைப் பல்கலை. வேளாண்துறையில் 1968-69-ம் ஆண்டு வேளாண்துறை மாணவர் செல்லையாவால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும், கால்நடைகள் மற்றும் மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உயர் விளைச்சல் தரும் ரகமாக உருவாக்கப்பட்டது அண்ணாமலை கத்தரி.
அதிக மகசூல் தரும் இந்த கத்தரி பெரிதாகவும், ருசியாகவும் இருக்கும். தற்போது சிதம்பரம் தாலுக்காவில் அண்ணாமலைப் பல்கலை. கிராமப்புற வேளாண் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தலைமையில் வேளாண் மாணவர்கள் மூலம் அண்ணாமலை கத்தரி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அண்ணாமலை கத்தரி விதைகளை தொடர் விரிவாக்கத்துறை வாயிலாக பெற்று அண்ணாமலை கத்தரி சாகுபடி செய்து அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெற்று வருகின்றனர் விவசாயிகள்.
சிறப்புகள்: அண்ணாமலை கத்தரி பன்னெடுங்காலமாக விவசாயிகளின் தோட்டங்களில், வீடுகளில் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக பெண்களால் வீடுகளில் அமைக்கப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. வீட்டு காய்கறித் தோட்டங்களில் முக்கிய காய்கறிப் பயிராக தொடர்ந்து சாகுபடி செய்யப்படுகிறது.
சுமார் 180 நாள்கள் வரை நல்ல மகசூல் தரும் அண்ணாமலை கத்தரி. குறிப்பாக கத்தரி சாகுபடியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அசுவினிக்கு எதிராக வளரும் ரகமாக உருவாக்கப்பட்ட அண்ணாமலை கத்தரி, அசுவின்கான தேசிய சோதனை ரகமாகும். உயர் வேளாண் ஆராய்ச்சி அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பையும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாத்து அடுத்த பருவத்துக்கும் மறுதாம்புப் பயிராக சாகுபடி செய்ய முடியும். குறைந்த வேளாண் முதலீட்டில் அதிகளவு லாபம் பெற முடியும்.
விவசாயி சீனுவாசப் பெருமாள் (சி.முட்லூர்): அண்ணாமலை கத்தரி சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் பகுதியில் தொடர் விரிவாக்கப் பணிகள் வாயிலாக ஏற்பட்ட விழிப்புணர்ச்சியால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து லாபம் பெற்று வருகின்றனர்.
தற்போது சிதம்பரம் புறவழிச் சாலை பணி முடிவுற்றால் அண்ணாமலை கத்தரியை கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் சந்தைகளில் விற்பனை செய்வதன் வாயிலாக மேலும் அதிக லாபம் பெற முடியும்.அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டால் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களையும் அதிகளவு விற்பனை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் சி.முட்லூர் பகுதி விவசாயிகள் புதிதாக சமுதாய விவசாய விதைப் பண்ணை அமைத்து பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.உழவர் மன்ற கூட்டமைப்புத் தலைவர் பெ.ரவீந்திரன்: தற்போது சி.முட்லூர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிளேடிஓலஸ் வண்ணமலர், அண்ணாமலை கத்தரி உள்ளிட்ட பிற காய், கனிகளை நல்ல முறையில் குளிர்பதன அறைகள் மூலம் பாதுகாத்து பல நாள்களுக்கு கெடாமல் வைத்திருந்து விற்பனை செய்ய மத்திய, மாநில அரசு மானிய உதவியுடன் விரைவில் புதிய திட்டத்தை தொடங்க உள்ளோம்.புதிய இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் வாயிலாக அதிக மகசூல் செய்து வாழ்வில் வளம் பெற விவசாயிகள் சங்கம் இணைந்து செயல்படும் என பி.ரவீந்திரன் தெரிவித்தார்.
குறிச்சொற்கள்:
சிறப்பு,
செய்திகள்,
தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்
0
கருத்துரைகள்
-இந்த பதிவிற்கு..
Post a Comment