இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பட்டுக்கூடு மையம் மற்றும் மதிப்பு கூட்டு தொழிற்சாலை : உடுமலையில் அமையாததால் 'அதிருப்தி'

பட்டுக்கூடுகள் விற்பனை மையம் மற்றும் மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் உற்பத்தியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பட்டு வளர்ச்சி துறை கணக்கீட்டின் அடிப்படையில் உடுமலை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டு பகுதிகளில் 3,603 ஏக்கரில் மல்பெரி பயிரிடப்பட்டு, 2,063 விவசாயிகள் பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வெண்பட்டுக்கூடுகளின் முக்கிய உற்பத்தி மையமாக உடுமலை உள்ளது. நாள்தோறும் ஒரு டன் பட்டுக்கூடுகள் கர்நாடகா மாநிலத்திற்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
மினிலாரிகள் மற்றும் பஸ்களில் மிகுந்த இடையூறுகளுக்கு இடையில் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக உற்பத்தியாளர்கள் எடுத்து செல்கின்றனர். கர்நாடகா மாநிலத்தில் பிரச்னைகள் மற்றும் திருவிழாக்கள் நடக்கும் போது தமிழகத்திலிருந்து கூடுகளை எடுத்து செல்ல முடியாமல் ஒவ்வொரு உற்பத்தியாளர்களுக்கும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
போக்குவரத்து செலவு மற்றும் வீண் அலைச்சலை தவிர்க்க உடுமலையில் விற்பனை மையம் அமைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மாநில அரசு சார்பில் நடமாடும் பட்டுக்கூடு கொள்முதல் மையம் 2007 ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் துவங்கிய மையம் இரண்டு வாரங்களுக்கு மேல் செயல்படவில்லை.
வியாபாரிகள் மற்றும் சர்வோதயா சங்கங்கள் கூடுகளை கொள்முதல் செய்ய உடுமலை பகுதிக்கு வர தயங்கியதால் மையத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மையத்தை செயல்படுத்த பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டுக்கூடுகள் தேவைப்படும் பகுதிகளில் சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. இதனால், பட்டுக்கூடுகள் மீண்டும் கர்நாடகா மாநிலத்திற்கே பயணிக்க துவங்கியது. பட்டு வளர்ச்சி துறை சார்பில் உடுமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாதனை பட்டியலிலும், துறை கணக்கில் மட்டுமே நடமாடும் பட்டுக்கூடுகள் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. உற்பத்தியாளர்கள் வேதனையை தவிர்க்க மையம் உண்மையாகவே செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலை இழுபறி: பட்டுக்கூடுகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் தொழிற்சாலைகளை நிறுவ மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. உடுமலை பகுதியில் அரசு பங்களிப்புடன் ஆட்டோமெட்டிக் ரீலிங் யுனிட் அமைக்கப்படும்; இதனால், உள்ளூரிலேயே பட்டுக்கூடுகளை விற்பனை செய்யலாம் என கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரவில்லை.
பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் பெயரளவிற்கு திட்டங்களை அறிவிக்காமல் முறையாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்து சிரமங்களை குறைக்க வேண்டும் என பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment