ஆத்மா திட்டத்தில் இயற்கை விவசாய சுற்றுலா
7:16 PM ஆத்மா திட்டத்தில் இயற்கை விவசாய சுற்றுலா, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
நாமக்கல் மாவட்டத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை (ஆத்மா) திட்டத்தின் கீழ், நிர்வாகக்குழு ஒப்புதலின் படி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் தமிழக உழவர் தொழில்நுட்ப கழகத்தின் இயற்கை வேளாண் பண்ணைக்கு 55 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அன்னூர் ராமலிங்கம் என்பவர் தனது பண்ணையில் இயற்கை வேளாண் மூலம் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் மஞ்சள் பயிர்களுக்கான தொழில் நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். பண்ணையில் இயற்கை வேளாணை பயன்படுத்தி ஏழு வகையான வாழை, பர்மா கல்சர், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றை நேரில் கண்டறிந்தனர். அக்கரை நகமம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீதாலட்சுமியின் வேளாண் பண்ணையில், பாசன நீருடன் பஞ்சகவ்யா கலந்து மக்காச்சோளப் பயிருக்கு பயன்படுத்துவதை நேரில் பார்த்தனர். மண்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியில் தமிழக உழவர் தொழில்நுட்ப கழகத் தலைவர் சுந்தர்ராமன், தனது பண்ணையில் இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள், மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு பற்றி பயிற்சி அளித்து, செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இயற்கை விவசாயம் தற்போது விவசாயிகளிடையே பிரபலமாகி வரும் நிலையில், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை வேலூரில் செயல்பட்டு வரும் சி.ஆர்.எம்.டி., தொண்டு நிறுவன இயக்குனர் சாந்தி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.
குறிச்சொற்கள்: ஆத்மா திட்டத்தில் இயற்கை விவசாய சுற்றுலா, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது