விலையை சொல்லுங்க... அள்ளிட்டு போங்க... :கொய்மலர் விவசாயிகள் விருப்பம்
10:07 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, விலையை சொல்லுங்க... அள்ளிட்டு போங்க... :கொய்மலர் விவசாயிகள் விருப்பம் 0 கருத்துரைகள் Admin
"கொய்மலர் விலையை அரசு நிர்ணயித்து, விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், மலர் சாகுபடி விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் போஜன் பேசியதாவது:பசுமைக் குடில்களில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. கொய்மலர் சாகுபடி மேற்கொள்ள, இடுபொருட்களின் விலையேற்றம் உட்பட பல காரணங்களால், விவசாயிகள் கடன் பெற வேண்டியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட கொய்மலர்களுக்கு, இடைத் தரகர்கள் மற்றும் தனியார் வியாபாரிகள் சிலர், குறைந்த விலையே நிர்ணயித்து, வியாபாரிகளை அலைக்கழிக்கின்றனர். இதனால், மலர் சாகுபடி விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.
விவசாயிகளின் சிரமத்தை போக்க, அறுவடைக்கு தயாரான மலர்களை விற்பனை செய்யும் வரை, அவற்றை பாதுகாக்க, கோத்தகிரி, குன்னூர், ஊட்டி பகுதிகளில் மலர் பதப்படுத்தும் அறையை அரசு அமைத்து, மலர்களை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊட்டியில் அமைந்துள்ள விற்பனை மையத்தில், தனியார் வியாபாரிகள் "சிண்டிகேட்' அமைத்து, விவசாயிகளுக்கு குறைந்த விலை வழங்குவதை தவிர்த்து, அரசே விலை நிர்ணயித்து, விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, போஜன் பேசினார்.பசுமைக் குடில் அமைத்தல், மண் பதப்படுத்துதல், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான நேரங்களில் உரமிடுதல், நோயை கட்டுபடுத்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல் குறித்து விளக்கப்பட்டது.
கோவை வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஜவஹர், கல்யாணசுந்தரம், முத்துலட்சுமி தலைமை வகித்தனர்.மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க ஆலோசகர் அருணா நந்தகுமார், பொருளாளர் பெள்ளிகவுடர், செயலர் போஜன், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சகாதேவன், முத்துமணி, மாதன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். அலுவலர் சிவன் நன்றி கூறினார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, விலையை சொல்லுங்க... அள்ளிட்டு போங்க... :கொய்மலர் விவசாயிகள் விருப்பம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது