இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய பெண்கள் விழிப்புணர்வு பெறணும் : இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வலியுறுத்தல்

பெண்கள் விழிப்புணர்வு பெற்றாலே நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யப்படுவதோடு மரபணு மாற்று விதைகளையும் எதிர்ப்பதற்கு உரிய உத்வேகம் பெற்று விடுவோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க 2வது மாநில மாநாட்டை தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தலைவி ஷிலு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மாநில தலைவி ஷிலு பேசுகையில், தஞ்சை நெற்களஞ்சியமாக திகழும் மாவட்டம். அதிக நெல் உற்பத்தி உள்ள பகுதியாகும். பசுமை புரட்சி என்ற பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்கள் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தியதால் உணவு விஷமாகிவிட்டது. மரபணு மாற்றுப்பயிர் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும். இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு இடைஞ்சலும், பிரச்னையும் வருகிறது. பெண்கள் தாங்களே விவசாயம் செய்வதை முடிவு செய்ய வேண்டும். தற்போதுள்ள பெண் விவசாயிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர வேண்டும் என்றார்.



இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: மனிதனுக்கு நல்ல காற்று, தண்ணீர், உணவு இருந்தாலே நோயற்ற வாழ்வை மேற்கொள்ள முடியும். பூமியில் விவசாயம் 7 ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்போது கெடாத நிலம் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்க கம்பெனிகளால் கெட்டு தரிசு நிலமாக மாறி வருகிறது. காரணம், அவர்களிடம் இருந்து ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை நம்மிடம் விற்று அதனை பயன்படுத்தியதால் உணவு விஷமாகியது மட்டுமல்லாமல் நிலத்திலுள்ள நுண்ணுயிர்களும் செத்து விட்டது.



தற்போது மரபணு என்ற பெயரில் பி.டி.கத்திரிக்காயை தொடர்ந்து 32 வகையான புதிய விவசாய விதைகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கிவிட்டன. இதனால் நம்முடைய உணவை நாம் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அன்னிய கம்பெனிகளின் முன்பு நாம் கை கட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டனர். விவசாயிகள் மற்றும் நுகர்வோர் 2வது சுதந்திர போரில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம். பெண்கள் விழிப்புணர்வு பெற்றாலே நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யப்படுவதோடு மரபணு மாற்று விதைகளையும் எதிர்ப்பதற்கு உரிய உத்வேகம் பெற்றுவிடுவோம். விஷமற்ற உணவை நாம் உண்பதற்கு இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அனைவரும் ஒத்துழைப்பு தந்து போராட வேண்டும். ஜீனி விலை உயர்ந்துள்ளது. ஆனால் கரும்புக்கு விலை உயரவில்லை.



அதேபோல் காய்கறிகள், உளுந்து, பயிர் வகைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் நெல் உட்பட உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னுதாய் வரவேற்றார். மாநாடு இன்று (7ம் தேதி) வரை நடக்கிறது. இதில் வேதியியல் உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், இயற்கை விவசாயம், பாரம்பரிய விதை பராமரிப்பு தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடக்கிறது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment