கொள்முதல் வசதியின்றி தவிக்கும் கொப்பரை விவசாயிகள்
7:52 AM கொள்முதல் வசதியின்றி தவிக்கும் கொப்பரை விவசாயிகள், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
கடலூர் மாவட்டத்தில் பெருமளவில் தென்னை பயிரிடப்பட்டும், கொப்பரைத் தேங்காயை விற்று, பலனடைய முடியாமல் கடலூர் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வட்டங்களில் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருப்பதால் தென்னை பெருமளவுக்குப் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது 10 ஆயிரம் ஏக்கரில் சுமார் 2.5 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இதில் இருந்து சராசரியாக ஒரு தென்னைக்கு, ஆண்டுக்கு 100 காய்களுக்குக் குறையாமல் தேங்காய் கிடைக்கிறது.
உற்பத்தியாகும் தேங்காய் பெரும்பாலும் இளநீராக வெட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்படுகிறது. முற்றவைத்துத் தேங்காயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இளநீராக விற்றாலும் முற்றிய தேங்காயாக விற்றாலும் விவசாயிக்கு ஒரு தேங்காய்க்கு விலையாகக் கிடைப்பது ரூ.2-ல் இருந்து ரூ.3 வரைதான்.
தேங்காய் பறிக்கவும் உரிக்கவும் ஆள்கள் கிடைக்காததால், பல விவசாயிகள் இளநீராக காய் ஒன்று ரூ.2 வீதம் விற்றுவிடுகிறார்கள். மேலும் கீற்று முடையவும் ஆள்கள் கிடைக்காததால், அதில் இருந்து கிடைக்கும் வருவாயும் விவசாயிகளுக்குக் கிடைப்பது இல்லை.
ஆனால் தென்னை அதிகம் பயிரிடப்பட்டு இருக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில், கொப்பரைத் தேங்காயாக விற்பனை செய்வதால், தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. அந்த மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போதைய கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.44.50 ஆக உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் தேங்காய் ஒன்றுக்கு ரூ.4.45 வரை விலை கிடைக்கும் என்கிறார்கள் கடலூர் தென்னை விவசாயிகள்.
ஈரோடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையமும் இல்லை.
பிற மாவட்டங்களில் உள்ள கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யவும் அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தனியாரிடம் கொப்பரைத் தேங்கயை கிலோ ரூ.33-க்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் காரணமாகக் கடலூர் மாவட்டத் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
2000-மாவது ஆண்டு கடலூர் மாவட்டத் தென்னை விவசாயிகள் கொப்பரைத் தேங்காயை, நாகை மாவட்டத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வழங்கப் பட்டது. அப்போது தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்தது.
அதன்பிறகு கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பு அனுமதியும் வழங்கவில்லை, கொள்முதல் நிலையமும் திறக்கவில்லை. 2000 ஆண்டில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலில் நடந்த ஊழல் காரணமாக சிறப்பு அனுமதி வழங்குது 2001-ல் நிறுத்தப்பட்டது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது கடலூரை அடுத்த வெள்ளப்பாக்கம் விவசாயிகள் சங்கர் சேரலாதன் ஆகிய இருவர் மட்டுமே தற்போது 25 டன் கொப்பரைத் தேங்காயை தயாரித்து, விற்பனைக்கு வழித்தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் இதுவரை பலன் கிடைக்க வில்லை என்றும் விவசாயி சங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்க கடலூர் மாவட்ட அமைப்பாளர் ரவீந்திரன் கூறுகையில்,
""கடலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் நியாமான விலை கிடக்காததால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேங்காய் பறித்தல், உரித்தல், கீற்று முடைதல் போன்ற வேலைகளுக்கும் ஆள்கள் கிடைப்பதில்லை. இருக்கின்ற தென்னை மரங்களை வெட்டி விடலாமா என்று யோசித்து வருகிறார்கள். கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யும் அளவுக்கு தென்னை மரங்கள் உள்ளன. கடலூர் மாவட்டத் தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுமானால் கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்
குறிச்சொற்கள்: கொள்முதல் வசதியின்றி தவிக்கும் கொப்பரை விவசாயிகள், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது