டன்னுக்கு ரூ.480 வரை யூரியா விலை அதிகரிப்பு
12:59 AM சிறப்பு, செய்திகள், டன்னுக்கு ரூ.480 வரை யூரியா விலை அதிகரிப்பு, தலைப்பு 0 கருத்துரைகள் Admin
விவசாயிகள் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருளான யூரியாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, டன் ஒன்றுக்கு ரூ. 4,830 ஆக இருக்கும் யூரியாவின் விலை ரூ.5,310 ஆக உயர்த்தப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.மத்திய அமைச்சரவையின் கூட்டம்,பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று நடைபெற்றது. விவசாயத் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் பொருளான யூரியாவின் விலையை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டதால், கூட்டத்தின் முடிவுகள் குறித்து அறிவதில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி சந்தித்தார். அப்போது அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கிப் பேசியதாவது:ஒருமனதாக முடிவு: யூரியாவின் விலை தற்போது டன் ஒன்றுக்கு ரூ.4,830 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்து வருகிறது. இதை, ரூ.5,310 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவு என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட தாகும். குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்ட ஒன்றாகும். இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரியும் இருந்தார். விலை அதிகரிப்பு நடவடிக்கை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாகும். உரம் தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. தற்போது, உரங்களுக்கு அளிக்கப்படும் மானியம் என்பது இனிமேல் அதில் கலந்துள்ள ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் அளிக்கப்படும். சர்வதேச சந்தையில் நிலவும் நிலவரங்களுக்கு ஏற்ப உரம் விலை நிர்ணயிக்கப்படும்.எப்போதெல்லாம் தேவைப்படு கிறதோ அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்து விலை நிர்ணயம் இருக்கும். இருப்பினும் உரத்தின் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். தவிர, யூரியா தவிர்த்த பிற உரங்களின் விலை உயர்த்தப்படாமல் இருக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். கடந்து ஆண்டு மட்டும் உரத்திற்கு மானியம் வழங்கிய வகையில் ரூ.56 ஆயிரம் கோடி வரை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அம்பிகா சோனி தெரிவித்தார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், டன்னுக்கு ரூ.480 வரை யூரியா விலை அதிகரிப்பு, தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது