பலாவில் பூச்சிச் தாக்குதல்: விவசாயிகள் வேதனை
4:26 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பலாவில் பூச்சிச் தாக்குதல்: விவசாயிகள் வேதனை 0 கருத்துரைகள் Admin
பூச்சித் தாக்குதல் காரணமாக பலா மரத்தில் உள்ள பிஞ்சுகள் பாதிப்படைந்து சொத்தை விழுந்து வருவதால் பண்ருட்டி பகுதி பலா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கடலூர், விருத்தாசலம் பகுதியில் சுமார் 29 ஆயிரம் ஹெக்டர் நிலப் பரப்பளவில் முந்திரிக்காடுகள் உள்ளன. குறிப்பாக பண்ருட்டி வட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் பரந்துள்ள முந்திரிக் காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரங்கள் வளர்க்கப்படுகின்றன.மண் வளமும், தட்பவெப்ப நிலையும் சாதகமாக அமைந்துள்ளதால் பண்ருட்டி பகுதியில் பலா மரம் செழித்து வளர்வதுடன், பழமும் மிக சுவையாக இருக்கும். இதனால் பண்ருட்டி நகரம் பலா பழத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது.மேலும் இப்பகுதியில் விளையும் பலாப் பழங்கள் சென்னை, ஆந்திரம், பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பலா பிஞ்சுகளில் பூச்சி மற்றும் பூஞ்சான நோய் தாக்கம் எப்போதும் இல்லாத அளவு தற்போது அதிகம் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகளிடம் விசாரித்ததில் அவர்கள் கூறியது: போதிய இடைவெளியுடன் அண்மையில் பெய்த கனமழையால் மண் ஈரப்பதமாக காணப்படுவதால் காய்ப்பு தன்மை குறைய வாய்ப்புள்ளது. மேலும் தற்போதைய கடுமையான பனிப்பொழிவு காரணமாக பிஞ்சில் பூச்சி மற்றும் பூஞ்சாண நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதனால் கருகி விழுவதுடன், சொத்தை விழுவதால் மகசூல் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.இது குறித்து பண்ருட்டி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் கூறியது: பண்ருட்டி பகுதியில் பலா மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பலா பூ மற்றும் காய் பிடிக்கும் நிலையில் உள்ளது. சீதோஷ்ண நிலை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூஞ்சாண மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது பைட்டோலான் அல்லது டைத்தேன் எம்:45 இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் என வி.ராமலிங்கம் கூறினார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பலாவில் பூச்சிச் தாக்குதல்: விவசாயிகள் வேதனை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது