இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நாமக்கல் உழவன் உணவகத்தில் 'ஐஸ்கிரீம்' விற்பனை

உழவர் சந்தை உணவகம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் ஐஸ்கிரீம் விற்பனையும் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முதலாக கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி உழவர்களின் உணவகம் திறக்கப்பட்டது. உழவர் வருமானத்தை பெருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்ய திட்டம் வகுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. பால், தயிர், மோர், நெய் மற்றும் பால்கோவா பொருள் தயாரித்து விற்பனை துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்தும் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.நகர்ப்புறத்தில் வாழும் மக்கள் மற்றும் நுகர்வோர் கிராமப்புறத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அத்தகைய விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில், மாலை நேரத்தில் உழவர் சந்தையில், உழவர்களின் உணவகம் திறக்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடந்த திறப்பு விழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் காந்திச்செல்வன் உணவகத்தை திறந்து வைத்தார்.துவங்கப்பட்ட நாளில் மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இட்லி, தோசை, சோளசாதம், சாமை சாதம், தினை சாதம், கம்மங்கூழ், கேழ்வரகு கழி, பக்கோடா, பாசிபயிறு உருண்டை, சுண்டல், வடை, ஆட்டுக்கால் கிழங்கு மூலிகை சூப், காய்கறி சூப், உளுந்தங்கஞ்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. மாலை வேளையில் உணவகம் திறக்கப்படுவதால், நாள்தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து, இட்லி, பனையாரம், உளுந்தங்கஞ்சி, கழி, சோளப்பனையாரம் போன்ற உணவு வகைகளை வாங்கி உண்ணுகின்றனர்.அதனால், நாளுக்கு நாள் உணவு பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதுவரை 35 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் அனைத்தும் சுவையாகவும், தரமானதாகவும், சுத்தமாகவும் விற்பனை செய்வதால், பெருமளவில் வந்து ருசிபார்க்கின்றனர். இந்த உழவன் உணவகம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றள்ளது. இந்நிலையில் உழவன் உணவகத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் மூலம் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 1.38 லட்சம் ரூபாய் மதிப்பில் இயற்கை முறையில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது.அதன் துவக்க விழாவில், கலெக்டர் சகாயம் தலைமை வகித்து விற்பனையை துவக்கி வைத்தார். இந்தியன் வங்கி ஏ.ஜி.எம்., மகாதேவன், முதன்மை மேலாளர் ராமசாமி, முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ், கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் சந்திரஹாசன், கே.வி.கே., ஒருங்கிணைப்பாளர் மோகன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஆத்ம திட்ட துணைத்தலைவர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment