மாவு பூச்சியை அழிக்க ரூ.67 லட்சத்தில் திட்டம் : அன்னூரில் வேளாண் துறை பணி துவக்கம்
11:35 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மாவு பூச்சியை அழிக்க ரூ.67 லட்சத்தில் திட்டம் 0 கருத்துரைகள் Admin
அன்னூர், அவிநாசி வட்டாரத்தில் 3000ம் ஏக்கரில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ரூ. 67 லட்சத்தில் மருந்து தெளிப்பு பணி நேற்று துவங்கியது. அன்னூர் வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் பயிர்களில் கள்ளிப்பூச்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலைகள் சுருண்டு, விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டுவளர்ப்பு துறை இணைந்து ஒருங்கிணைந்த மருந்து தெளிப்பு பணியை நேற்று அல்லப்பாளையத்தில் துவக்கின. கோவை வேளாண் இணை இயக்குனர் கந்தசாமி துவக்கி வைத்து பேசியதாவது: இத்திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் அன்னூர், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஆகியவற்றுக்கு 67 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக அன்னூர் வட்டாரத்தில்தான் 7,600 ஏக்கர் பரப்பில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அசாடிராக்டின் தண்ணீரில் கலந்து ரோட்டோரம், குளம், குட்டை மற்றும் தோட்டங்களில் உள்ள செடிகள், பயிர்களுக்கு தெளிக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு பின் புரொபனோபாஸ் மருந்து தெளிக்கப்பட உள்ளது. இதனால் மாவுப்பூச்சி நூறு சதவீதம் கட்டுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் ஐம்பது சதவீத நீரை சேமிக்கலாம். 65 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பயறு பெருக்கத்திட்டத்தில் டிஏபி உரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. எண்ணை வித்து பயிரிடும் விவசாயிகளுக்கு ஜிப்சம் 50 சதவீத மானியத்தில் வழங்குகிறோம். விசை தெளிப்பானுக்கு 2,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கந்தசாமி பேசினார். துவக்க நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரேம்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதா, ஊராட்சி தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். விசை தெளிப்பான் மூலம் 11 பேர் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நாளில் நூறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் தெளிக்கப்பட்டது.
ஓரைக்கால்பாளையத்தில் தானியங்களை உலர வைக்க உலர் களன் அமைத்து தர வேண்டும் என்று பண்ணை மகளிர் குழுவினர் மனு கொடுத்தனர். விவசாயிகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். "மாவுப்பூச்சி தாக்குதலால் பட்டுப்புழு வளர்ப்பு நலிந்து வருகிறது' என விவசாயிகள் அதிகாரிகளிடம் கூறினர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மாவு பூச்சியை அழிக்க ரூ.67 லட்சத்தில் திட்டம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது