முருங்கை விவசாயிகளின் 30 ஆண்டு கனவு முருங்கை பவுடர் தொழிற்சாலை அமையுமா?
8:23 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, முருங்கை பவுடர் தொழிற்சாலை அமையுமா? 0 கருத்துரைகள் Admin
திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு முருங்கை இன்றியமையாததாக இருப்பதால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. முருங்கை இலை, காய் ஆகியவை மருத்துவ குணம் நிறைந்ததாக இருப்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முருங்கைக்கு உலக நாடுகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் நல்ல விலை கிடைத்தது. தாராபுரம், மூலனூர், மதுக்கம்பாளையம், வெள்ளகோவில், அலங்கியம், தளவாய்பட்டணம் உட்பட ஆயிரக்கணக்கான கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனர். முருங்கைக்கு ஆண்டு முழுவதும் சீஸன் இருப்பதில்லை. தட்டுப்பாடு நிலவும் இப்போதைய சூழலில் முருங்கைக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், காய் இல்லை. சீஸன் சமயத்தில் கிலோவுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் விவசாயிகள் முருங்கையை மரத்திலேயே விட்டு விடுவர். ஒரு சில விவசாயிகள் முற்றிய காய்களை பறித்து, விறகுக்கு பதில் எரிபொருளாக பயன்படுத்தும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்க்க தாராபுரம் அல்லது மூலனூரில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைத்து, முருங்கைக்காயை மற்றும் இலையை அரசே கொள்முதல் செய்து மருத்துவத்துக்கும், உணவுக்கும் பயன்பாட்டுக்கும் போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதன்மூலம், முருங்கைக்கு ஆண்டு முழுவதும் நல்ல விலை கிடைக்கும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பு.
தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம், ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர், திண்டுக்கல், பழனி ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும், "தாங்கள் வெற்றிபெற்றால் இப்பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை கொண்டு வருவேன்' என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி கொடுக்கின்றனர். இதை நம்பி விவசாயிகளும் நம்பி ஓட்டு போடுகின்றனர். வெற்றிபெற்று எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யானவர்கள், முருங்கை தொழிற்சாலையை மறந்துவிடுகின்றனர். முருங்கை பவுடர் தொழிற்சாலை என்பது 30 ஆண்டுகளாக தேர்தலுக்கான துருப்புச் சீட்டாக பயன்பட்டு வந்துள்ளது. தாராபுரத்தில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க தமிழகரசு முன் வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, முருங்கை பவுடர் தொழிற்சாலை அமையுமா?
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது