இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

300 மூடை நெல் இருந்தால் களத்தில் கொள்முதல் : நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் தகவல்

டெல்டா மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி நேற்று நேரில் ஆய்வு செய்தார். தஞ்சையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டத்தில் சம்பா அறுவடைப்பணி முழு வீச்சில் நடக்கிறது. கொள்முதல் நிலையங்களில் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. டெல்டாவில் ஆயிரத்து 123 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 977 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக திருவாரூரில் 11 ஆயிரம் டன், தஞ்சையில் எட்டாயிரம் டன், நாகையில் ஏழாயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கொள்முதல் பணியை ஆய்வு செய்ய 159 கொள்முதல் அலுவலர்கள், 17 உதவி மேலாளர்கள் செயல்படுகின்றனர்.


டெல்டா மாவட்டத்தில் இருந்து இதுவரை லாரி மற்றும் ரயில்கள் மூலம் 84 ஆயிரத்து 589 டன் நெல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமாகி உள்ளதால், கொள்முதல் நிலையங்கள் கூடுதல் நேரம் செயல்பட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தினமும் மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதை ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்குகிறோம். குறிப்பிட்ட விவசாயியிடம் 300 மூடை நெல் இருந்தால், அவரது களம், இருப்பிடத்துக்கு லாரி, தராசுகளுடன் சென்று கொள்முதல் செய்யப்பட்டு, அங்கேயே பணம் பட்டுவாடா செய்யப்படும். திடீர் ஆய்வுகள் மூலம் தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர், தெக்கூர், களிமேடு, பூதலூர் ஆகிய கொள்முதல் நிலையங்களில் மூன்று பட்டியல் எழுத்தர், இரண்டு உதவியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டனர்.



திருவாரூர் மாவட்டத்தில் காளாஞ்சேரி, இளையூர், ஒளிமதி ஆகிய கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நாகை மாவட்டத்தில் கடலங்குடி கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். திடீர் ஆய்வின்போது தவறு செய்யும் பணியாளர்கள் மீது விசாரணைக்குப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் பணியைத் தொடர்ந்து கண்காணிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் தொடர்பாக புகார்களை தஞ்சை மாவட்ட விவசாயிகள் 9445190660, திருவாரூர் மாவட்டத்துக்கு 9445190661, நாகை மாவட்ட விவசாயிகள் 9445190662 என்ற எண்களில் புகார் செய்யலாம். தற்போதுதான், அதிகமாக கொள்முதல் துவங்கியதால் இனி கொள்முதல் அதிகப்படுவதுடன், புகார்களும், நடவடிக்கைகளும் அதிகமாகும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை தவிர்த்து, வியாபாரிகளிடம் முன்னுரிமை கொடுத்து கொள்முதல் செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அவ்வாறு செய்யவில்லை. நெல் கொள்முதல், லாரிகளை நகர்வு செய்தல் போன்றவைகளுக்கு பணம் கொடுத்தால்தான் செயல் நடக்கும் என்ற புகார் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் உடனிருந்தார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment