இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொப்பரை விலை உயர்ந்தும் தேங்காய் விலை உயரவில்லை:தென்னை விவசாயிகள் விரக்தி

ஜூலை.4 , மழை சீசன் துவங்கியுள்ளதால் வெளிமார்க்கெட்டில் கொப்பரைக்கு கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. ஆனாலும், தேங்காய் விலை உயராமல் மந்தமாக உள்ளதால் விவசாயிகள் விரக்கியில் உள்ளனர்.கொப்பரை விலை உயர்ந்து வந்ததால், மார்க்கெட் கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக உள்ளது. தென்மேற்கு பருவமழை சீசனால் பொள்ளாச்சியில் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் வெள்ளக்கோவில், காங்கேயம் பகுதியில் கொப்பரை உலர்களங்களை ஏற்பாடு செய்து கொப்பரை உற்பத்தி செய்கின்றனர். கொப்பரை உற்பத்தி ஓரளவுக்கு இருந்தாலும் மார்க்கெட்டில் கிராக்கி உள்ளதால் விலை உயர்ந்துள்ளது.காங்கேயம் மார்க்கெட்டில் கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 33.50 ரூபாயும், நேபட் தரத்திலான கொப்பரை கிலோவுக்கு 36 ரூபாய் விலை கிடைத்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 755 ரூபாயும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 54 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.பறித்து உரிக்கப்பட்ட தேங்காய் டன்னுக்கு ஒன்பதாயிரம் ரூபாயும், மரத்தில் இருந்து பறித்து கொள்வதற்கு ஒரு தேங்காய்க்கு 4.25 ரூபாயும், காய்ந்த தேங்காய்க்கு ஐந்து ரூபாயும் விலை கிடைத்தது.

நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 34 ரூபாய் விலை கிடைத்தது. நேபட் தர கொப்பரை கிலோவுக்கு 40 ரூபாய் வரையிலும் விலை கிடைக்கிறது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 755 ரூபாயும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 54 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.பறித்து உரிக்கப்பட்ட தேங்காய் டன்னுக்கு 9,100 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரையிலும், மரத்தில் இருந்து பறித்துக் கொள்ள ஒரு தேங்காய்க்கு 4.80 முதல் ஐந்து ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது.கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு கொப்பரை கொள்முதல் இன்னும் வேகம் பிடிக்கவில்லை. மாறாக கடந்த ஆண்டு அரசு கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள கொப்பரை கிலோவுக்கு 35.30 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.


இதனால் வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை இறங்கு முகத்தில் உள்ளது.இந்நிலையில், மழை சீசன் துவங்கியுள்ளதால் பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் கொப்பரை உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வியாபாரிகள் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள கொப்பரை உலர்களங்களை வாடகைக்கு பிடித்து, கொப்பரை உற்பத்தியை துவங்கியுள்ளனர்.ஆனாலும், கொப்பரைக்கு தொடர்ந்து கிராக்கி உள்ளதால் விலை ஏறுமுகத்தில் உள்ளது. கொப்பரையின் விலை உயர்ந்தாலும், தேங்காய் விலை உயரவில்லை. தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய முடியாததால், தேங்காய் பறிப்பு, உரிப்பு போன்ற பணிகள் ஸ்தம்பித்துள்ளன. தென்மேற்கு பருவமழை சீசன் முடிந்தால் தான், தேங்காய்க்கு பறிக்கும் பணிகள் தீவிரமடையும்.கொப்பரை விலை உயர்ந்து வரும் நிலையில், தேங்காய் விலை உயராததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment