தென்னை, சிறுதானிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
6:58 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் சிறு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்து, இழப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் அறிக்கை:தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மீளலாம்.தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து விவசாயிகளுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வயல் வரப்புகளில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ தென்னை நடவு செய்திருந்தால் காப்பீடு செய்யலாம். குறைந்தபட்சம் 10 பலன் தரும் மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
காப்பீட்டு தொகை மற்றும் பிரிமியம் செய்த நான்காவது ஆண்டில் இருந்து 15வது ஆண்டு வரையுள்ள மரங்கள் மற்றும் 16வது ஆண்டில் இருந்து 60ம் ஆண்டு வரையுள்ள மரங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தி காப்பீடு செய்ய வேண்டும்.பிரிமிய தொகையில் 50 சதவீதம் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரிமியம் மட்டும் வசூலிக்கப்படும். எந்த தேதியில் பிரிமியம் செலுத்தப்படுகிறதோ, அன்றில் இருந்து ஒரு ஆண்டுக்கு பாலிசி வழங்கப்படும். ஆண்டு தோறும் பிரிமியம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பின் 45 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கும். இந்த திட்டம் பற்றிய விபரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேரிலோ, 99437 37557, 94438 21170 மற்றும் 94866 85369 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பயிர் காப்பீட்டு திட்டம்: பருவநிலை மாற்றங்களால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் மகசூல் இழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் "வானிலை சார்ந்த பயிர்க் காப்பீட்டு திட்டத்தில்' சேர்ந்து பயனடைய வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத்திலும் தானியங்கி வானிலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன் பருவநிலை மாற்றங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதுடன், இந்த திட்டத்தில் சேர்ந்து பிரிமியம் செலுத்தும் விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை நேரடியாக கம்பெனி மூலம் காசோலையும் அனுப்பி வைக்கப்படும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் வரியுடன் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு 276 ரூபாயும், மற்ற சிறு தானியங்களுக்கு 138 ரூபாயும், நிலக்கடலைக்கு 386 ரூபாயும், பருத்தி (இறவை) 827 ரூபாயும், மானாவாரி பருத்திக்கு 529 ரூபாயும், பயறு வகை பயிர்களுக்கு 138 ரூபாயும் செலுத்த வேண்டும்.இதற்கான படிவங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு, பிரிமியம் தொகையும் அங்கேயே செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயிர் காப்பீடு செய்தால், மகசூல் மற்றும் பொருளாதார இழப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது