இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயிகளின் மஞ்சள் மோகத்தால் நெல் விலை உயர்வு


கோபிசெட்டிபாளையம்:மஞ்சள் விலை உயர்ந்ததால் கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதி விவசாயிகள் மஞ்சள் சாகுபடியை அதிகப்படுத்தினர். நெல் சாகுபடி பரப்பளவு கணிசமாக குறைந்ததால், நெல் விலை உயர்ந்துள்ளது.அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ்பவானி, குண்டேரிப்பள்ளம் அணை பாசனப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் முதன்மையாக பயிரிடப்பட்டு வந்தது.நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, மஞ்சள் பயிர்களை விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். 2009 துவக்கத்தில் இருந்து மஞ்சள் விலை படிப்படியாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் குவிண்டால் மஞ்சள் விலை 17 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. இதனால், கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல்லுக்கு இணையாக மஞ்சள் பயிரிடத் துவங்கினர்.

சென்றாண்டு இரண்டாம் போகத்திலேயே மஞ்சளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டனர். நெல் பயிரிடும் விவசாய பரப்பளவு கணிசமாக குறைந்தது.நெல்லுக்கு தேவை அதிகரித்ததால், விவசாயிகளை நேரடியாக தேடிச் சென்று, வியாபாரிகள் நெல்லை வாங்கினர். இதனால், இரண்டாம் போக சாகுபடி முடிவில் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட அரசு கொள்முதல் நிலையங்களில் கூட எதிர்பார்த்தளவு நெல் வரவில்லை. இந்நிலையில், நெல் சாகுபடி குறைவால் தற்போது விலை அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் டீலக்ஸ் பொன்னி நெல் ஒரு பொதி (264 கிலோ) 3,300 ரூபாய் வரை விற்றது. தற்போது 3,800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏ.பி.டி., 2,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய்க்கும், ஏ.எஸ்.டி., இட்லி குண்டு நெல் ரகத்தின் விலை ஒரே சீராக இல்லாமல் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.கர்நாடகா டீலக்ஸ் நெல் ஒரு கிலோ 14 ரூபாயிலிருந்து 19.50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

நெல் விலை உயர்வால் கர்நாடகா டீலக்ஸ் அரிசி 75 கிலோ மூட்டை 2,000 ரூபாயில் இருந்து 2,100 ரூபாய்க்கும், டீலக்ஸ் 1,800 லிருந்து 2,150 ரூபாய்க்கும், ஏ.டி.டி., 1400 ரூபாயில் இருந்து 1,550 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பகுதிகளில் கடந்த இரண்டாம் போகத்தில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்ததாலும், தஞ்சை வட்டாரத்தில் பயிரிடப்பட்ட நெல் வகைகள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாலும், நெல் விலை தற்போது உயர்ந்துள்ளது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment