ஆப்பிள் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்!
9:32 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
தக்காளி விரைவில் அழுகக் கூடிய பொருள். மழை மற்றும் வெயில் காலங்களில் ஏராளமாக வீணாகிறது. இக்காலங்களில் விளைச்சலாகும் தக்காளியில் மூன்றில் இரண்டு பகுதி வீணாவதால், விவசாயிகளுக்கு இழப்பு அதிகமாகிறது. நாட்டு தக்காளி பயிரிட்டுக் கொண்டிருந்த விவசாயிகள், சில ஆண்டுகளாக புதிய ரகங்களை பயிரிட்டு வந்தனர். இவை, நாட்டு தக்காளி ரகத்தை விட, சற்று கூடுதல் நாட்கள் கெடாமல் இருக்கின்றன. தற்போது ஆப்பிள் தக்காளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு முன், பெங்களூரு, ஒசூரில் இருந்து இந்த ரகம், திருப்பூர் மார்க் கெட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அங்கு அதிக மழைப் பொழிவு மற்றும் ஈரப்பதம் அதிகம் என்பதால், அங்குள்ள விவசாயிகள் இந்த ரகங்களை அதிகம் பயிர் செய்து வந்தனர்.
இத்தக்காளி, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது. இதை பயிர் செய்ய முதல் தடவை மட்டும் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இரண்டாம் போகத்தில் இருந்து மற்ற ரகங்களுக்கு செய்யும் செலவை விட, மிகவும் குறைவாகவே ஏற்படுகிறது. ஆப்பிள் தக்காளி மற்ற ரகங் களை விட, நீண்ட நாட்கள் காய்க்கும் திறனுடையது. மற்ற ரகங்கள் ஒருமுறை மட்டுமே காய்க்கும்; ஆப்பிள் தக்காளி இரண்டு போகம் விளைந்து மகசூல் தரக்கூடியது.
பொதுவாக, தக்காளி ரகங்கள் அதிக ஈரப்பதம் உள்ள நிலத்தில் பட்டால் அழுகி விடும்; இதை தவிர்க்க, ஆப்பிள் தக்காளி செடிகள் நிலத்தில் படாமல் இருக்க, வயல் முழுவதும் சவுக்கு குச்சிகளை நட்டு, குச்சிகளுக்கு இடையே கம்பிகளை கட்டி விடுகின்றனர். கம்பிகள், வயலின் மேல் பகுதியில் வலை போல் காணப் படுகிறது. கம்பிகளில் இருந்து சணல் கயிறுகளால் செடிகளை கட்டி விடுகின்றனர். இக் கயிறுகள், செடிகள் நிலத்தில் படாமல், நேராக நிற்க உதவுகிறது.
இம்முறையில் தக்காளி செடிகளை பாதுகாப்பதால், மழை காலங்களில் செடி நிலத்தில் பட்டு பழங்கள் வீணாவது தடுக் கப்படுகிறது. ஒவ்வொரு செடிக்கும் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதனால் குறைவான தண்ணீர் இருந்தால் போதுமானது. இச்செடிகளை மற்ற ரகங்களை போல் மிகவும் அடர்த்தியாக நடாமல், அதிக இடைவெளியில் நட்டால் போதுமானது. இதனால் விதை, நாற்று நடுதல் போன்றவற்றுக்கு ஏற்படும் செலவு குறைகிறது.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: நாட்டு ரகங்களை பயிர் செய்து ஆண்டுதோறும் நஷ்டம் அடைந் தோம். விலை அதிகம் இருக்கும் போது காய்கள் அழுகி விடும்; சீசன் காலங்களில் அதிகமான விளைச்சல் காரணமாக விலை இருக்காது. இதை தவிர்க்கவே புதிய ரகத்தை பயிர் செய் கிறோம்; முதல் வருடம் சாகுபடி செய்யும் போது மட்டும் சவுக்கு குச்சி, கம்பி, சணல் கயிறு, சொட்டு நீர் பாசனம் போன்றவற் றுக்கு, 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு முறை செலவு செய்தால், இரண்டாம் போகத் தில் இருந்து செலவு செய்ய வேண்டியதில்லை, என்றனர்.
தற்போது, ஐந்து கிலோ தக்காளி கூடை 75 ரூபாய்க்கும், ஆப்பிள் தக்காளி 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சாதாரண ரகங்கள் சில்லரை விலையில் கிலோ 18 ரூபாய்க்கும், ஆப்பிள் ரகம் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது