இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; சாயக்கழிவு சங்கமம்: பரிதாப நிலையில் பவானியாற்றின் முக்கூடல்

ஈரோடு மாவட்டம் பவானி முக்கூடலில் சங்கமிக்கும் பவானி ஆறு, ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பிலும், சாயக்கழிவு நீரின் ஓடு பாதையாகவும் மாறியுள்ளது. பழமை வாய்ந்த பவானி சங்கமேஸ்வரர் கோவில் என்றாலே நினைவுக்கு வருவது மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்தான். காவிரியும், பவானியும் இணையும் இடத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு மத்தியிலிருந்து, ஆகாசவாணியாக அமுத நதி உருவாவதாக ஐதீகம். பெருமைமிக்க முக்கூடலில் சேரும் பவானியாற்றில் கலக்கும் விஷக்கழிவுகளால், நதி கடுமையாக மாசடைகிறது. பவானியாற்றை பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது.


எங்கு பார்த்தாலும் பச்சை பசேலாக தோற்றமளிப்பதால் ஆறுதானா? என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது. பவானி பழைய பாலம் பழுதடைந்ததாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததாலும் புதிய பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. புதிய பாலம் கட்ட தூண் அமைக்க பெரிய குழிகள் தோண்டப்பட்டன. குழி தோண்டிய மண் ஆற்றின் மேல் பகுதியில் கொட்டப்பட்டது. தூண் அமைக்கும் பணி நடந்து முடிந்த பிறகும் மண் சமன் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது. இதனால், ஆற்றில் ஆங்காங்கே படர்ந்திருந்த ஆகாயத்தாமரை அவ்விடம் விட்டு கடக்க முடியாமல் அப்படியே நின்று போனது. தேக்கமடைந்த ஆகாயத்தாமரை செடிகள் சதுப்பு நிலக்காடு போல காட்சியளிக்கிறது. பவானி பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஓராண்டுக்கு முன் பொது பணித்துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறு சுத்தம் செய்யப்பட்டது.


தற்போத் ஆகாயத்தாமரையின் ஆளுமை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தற்போது, ஆறா? இல்லை; ஆகாயத் தாமரையின் பிறப்பிடமா? என்று கேட்கும் அளவுக்கு முற்றிலும் ஆக்கிரமித்து விட்டது.பவானி பாலத்தின் இருபுறமும் 500 மீட்டருக்கும் அதிகமான தூரம் ஆகாயத் தாமரையாகவே இருக்கிறது. ஆகாய தாமரையின் இடுக்கில் முட்களும், விஷ செடிகளும் வளர்ந்து நிற்கிறது. மேலும், விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறியுள்ள பவானி ஆறு, கரையோரங்களில் வசிக்கும் மக்களை மிரட்டி கொண்டிருக்கிறது.இத்துடன், பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சில சாய நிறுவனங்களிலிருந்து வெளியேறும் சாயக்கழிவும் தண்ணீரோடு தண்ணீராக ஆற்றில் கலந்து விடுகிறது. கலப்பதென்னவோ உண்மைதான் என்றாலும், முக்கூடலை தாண்டும் வரை அதை கண்காணிக்கவே முடியாத நிலை உள்ளது. ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்புக்கு அடியில் சாயக்கழிவு சத்தமில்லாமல் ஓடுகிறது.


கோடை காலமும், வறட்சியும் தோள் மீது கை போட்டுக் கொண்டுள்ள இவ்வேளையில், மாசடைந்த தண்ணீரே பவானி சுற்றுவட்டார பொதுமக்களின் உயிர் நீராக இருக்கிறது. ஆகவே, ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கும் போதே, அதில் கலக்கும் சாயக் கழிவுவையும் கண்டு கொள்ளலாம். பவானி ஆறு நகராட்சிக்கா? பொதுப்பணித்துறைக்கா? என்ற குழப்பத்தை கலைத்து நடவடிக்கை எடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment