முள்ளில்லா மூங்கில் வளர்ப்பு: வனத்துறை புதிய முயற்சி
1:39 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
முள்ளில்லாத மூங்கில் சாகுபடியை அதிகரிக்க, மதுரை அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள்மலை வனவியல் ஆராய்ச்சி மையத்தில் பனிக்கூடாரத்திற்கு மாற்றாக, திறந்தவெளியில் நாற்றங்கால் அமைத்துள்ளனர். இம்முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கைவினை பொருட்கள், பர்னிச்சர், காகிதம் தயாரிக்க, மூங்கில் மரங்கள் அதிகம் பயன்படுகின்றன. சீனாவில் மூங்கிலிலிருந்து துணி தயாரிக்கின்றனர். இதன் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக வனத்துறை முள்ளில்லாத மூங்கில் சாகுபடியை அதிகரிக்க திட்டமிட்டது.
அமராவதி வனவியல் ஆராய்ச்சி மையத்தில், முதலில் பரிசோதனை முறையில் சாகுபடி செய்தனர். அங்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மதுரை அருகே வேம்பரளி, பெருமாள்மலை மற்றும் சிவகங்கை, நாகர்கோவில் வனவியல் ஆராய்ச்சி மையங்களில் வளர்க்கின்றனர். வேம்பரளி, பெருமாள்மலையில் பனிக்கூடாரங்கள் அமைத்து நாற்றங்கால் அமைத்துள்ளனர். மதுரை பகுதியின் பருவநிலையை தாங்கி வளர்கின்றதா? என பரிசோதிக்க, பெருமாள்மலையில் தற்போது திறந்தவெளியில் முள்ளில்லாத மூங்கில் நாற்றங்கால் அமைத்துள்ளனர். பனிக்கூடாரத்தில் முன்பு 45 நாட்களில், 1000 முதல் 2000 கன்றுகளைத்தான் வளர்க்க முடிந்தது. திறந்தவெளியில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் கன்றுகளை வளர்க்கின்றனர்.களிமண் கலந்த குறுமணலில் இம்மூங்கில் நன்றாக வளரும். அதிக நீர், தொடர்ந்து பராமரிக்கத் தேவையில்லை. சொட்டு நீர்ப்பாசனம் மூலமும் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளரும். முள் நிறைந்த மூங்கிலைவிட, இதை அறுவடை செய்வது சுலபம். இதன் ஆயுள் 60 ஆண்டுகள். விவசாயிகளுக்கு தொடர்ந்து வருவாய் கிடைக்கும். அதிக கார்பன்டை ஆக்சைடை உட்கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடும்.
இதன் பயன்கள் குறித்து விரைவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது