இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சின்ன வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் : விலை உயருமென நம்பிக்கை


வீழ்ச்சி அடைந்துள்ள சின்ன வெங்காயம் கொள்முதல் விலை, இன்னும் இரண்டு வாரத்தில் உயரும் என்ற நம்பிக்கையில், திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை மற்றும் குண்டடம் பகுதியில் உள்ள விவசாயிகள் படல் அமைத்து பட்டறை போட்டு பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சுல்தான்பேட்டை, குண்டடம் வட்டாரத்தில் 5,000 ஏக்கர் பரப்பளவில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. இதில், 3,000 ஏக்கர் பரப்பளவு 'ஹைபிரட்' சின்ன வெங்காயம், 2,000 ஏக்கர் நாட்டு ரக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது.கடந்த மாத இறுதியில் அறுவடையை துவக்கிய நேரத்தில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் கொள்முதல் விலை 15 ரூபாயாக இருந்தது. அறுவடை துவங்கிய 10 நாளில் ஒரு கிலோ 12 ரூபாயாக குறைந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பு; தமிழகத்தில் பல இடங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் வழக்கத்தை விட அமோகமாக இருப்பதால், சின்ன வெங்காயம் கொள்முதல் விலை சில நாட்களாக சரிந்துள்ளது; தற்போது, கிலோ ஏழு ரூபாய் என கடுமையாக சரிந்துள்ளது.கொள்முதல் விலை அதிரடி சரிவால், சுல்தான்பேட்டை மற்றும் குண்டடம் பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 'ஹைபிரட்' வெங்காயத்தை 15 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது என்பதால், அதை விவசாயிகள் உடனடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.நாட்டு ரக சின்ன வெங்காயத்தை மூன்று மாதங்கள் வரை அழுகாமல் படல் அமைத்து பாதுகாக்க முடியும். வெளிமாநில வெங்காயம் வரத்து குறைந்து இன்னும் இரண்டு வாரங்களில் கொள்முதல் விலை உயரும் என்ற நம்பிக்கையில், சுல்தான்பேட்டை மற்றும் குண்டடம் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள், சாகுபடி செய்துள்ள நாட்டு ரக சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து, படல் அமைத்து பட்டறை போட்டு பாதுகாத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.'சின்ன வெங்காயம் கொள்முதல் விலை குறைந்தபட்சம் கிலோவுக்கு 12 ரூபாயாவது கிடைத்தால் மட்டுமே ஓரளவு கட்டுபடியாகும்; தற்போதுள்ள விலை ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தையே தரும்' என, விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment