இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கே.ஆர்.பி., அணை கால்வாய் நீட்டிப்பு பணி மந்தம்: விவசாயிகள் பெரும் கலக்கம்



கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடது புற கால்வாய் நீட்டிப்பு பணி பல ஆண்டாய் ஆய்வு நிலையில் இருப்பதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் 'நந்திஹில்ஸ்' மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் அருகே கே.ஆர்.பி., அணை கட்டப்பட்டுள்ளது. அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் கொண்டு அணை பாசன பகுதியில் இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடும் போது தென்பெண்ணையாற்றில் நெடுங்கல் அணையில் இருந்து கால்வாய் மூலம் பாரூர் ஏரியில் தண்ணீர் தேக்கிவைத்து பாசனத்திற்கு விடப்படுகிறது. இதனால் அணை பாசனம் மூலம் 19,000 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.


கிருஷ்ணகிரி அணையில் இருந்து இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி, பாலேகுளி, மாரிசெட்டிஹள்ளி, நாகோஜனஹள்ளி, கால்வேஹள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஹள்ளி, எர்ரஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பையூர் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில் இடது புற கால்வாய் மூலம் திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு அவதானப்பட்டி ஏரி முதல் பாளேகுளி ஏரி வரை ஒன்பது ஏரியின் கீழ் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வலது புற கால்வாய் கடந்த இரு ஆண்டுக்கு முன் தர்மபுரி மாவட்டம் திண்டல் ஏரி வரை நீட்டிப்பு செய்து தற்போது பயன்பாட்டில் உள்ளது.


பாளேகுளி ஏரியில் இருந்து நாகரசம்பட்டி, தட்டக்கல், கம்மகாள்பட்டி, புதூர், வீரமலை, கரடியூர், காட்டாகரம்,சந்தூர் உள்ளிட்ட 28 ஏரிகளை இணைக்க கால்வாய் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஏரிகள் மழை காலங்களில் கூட தண்ணீர் நிரம்பாத நிலையில் ஏரி பாசன பகுதியில் எவ்வித விவசாயமும் செய்ய முடியாத நிலை உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் இந்த பகுதியில் உள்ள தென்னை மரங்களும் தண்ணீர் இன்றி வாடி வருதால் அவற்றை வெட்டி விட்டு மா செடிகளை நடுவு செய்கின்றனர். மேட்டுப்பாங்கான நிலத்தில் கிணற்று பாசனம் மூலம் சிலர் பணப்பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்த நிலையில் கிணற்று பாசன விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.


இதற்கு நிரந்தர தீர்வாக கே.ஆர்.பி., அணை இடது புற கால்வாய் பாளேகுளி ஏரியில் இருந்து நீட்டிப்பு செய்தால் 28 ஏரிகளிலும் தண்ணீர் நிரம்புவதுடன் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நல்ல முறையில் விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் எதிர்பாக்கின்றனர். மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் தர்மபுரி வரை நடைபயணம் மேற்கொண்டும் அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால், இதுவரை கால்வாய் நீட்டிப்பு பணி ஆய்வு நிலையில் இருந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்து வருகின்றனர். கால்வாய் நீட்டிப்பு பணி குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது: கிருஷ்ணகிரி அணையில் இருந்து செல்லும் இடது புற கால்வாய் நீட்டிப்பு பணி குறித்து தற்போது முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் 28 ஏரிகளை இணைக்கும் கால்வாய் வெட்ட தோராயமாக 5 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளருக்கு திட்ட மதிப்பீடு அனுப்பியுள்ளோம். மதிப்பீடு குறித்து கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. அரசு இதற்கான நிதியை ஒதுக்கி ஆணை பிறப்பித்தால் மூன்று ஆண்டு காலத்துக்குள் கால்வாய் நீட்டிப்பு பணிகளை முடிக்க முடியும். இதன் மூலம் அந்த பகுதி விவசாயிகளின் நீண்ட கால கனவு நனவாகும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment