கரும்பு சாகுபடியில் அதிக மகசூல்: சங்ககிரி பகுதி விவசாயி சாதனை
4:36 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணையத்தில் கரும்பு பயிரிட்டத்தில் சங்ககிரி அருகே உள்ள விவசாயி மாநிலளவில் ஓர் ஏக்கருக்கு 116 மெட்ரிக் டன் கரும்பு அதிக மகசூல் எடுத்துள்ளார். சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ராஜா. விவசாயி. இவர் தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணையம் முறையில் ஒரு ஹெக்டர் பரப்பில் கோ.86032 என்ற கரும்பு ரகத்தினை சிறப்பு பட்டத்தில் சாகுபடி செய்து அதற்கு சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழி உரப்பாசனக் கருவிகளை தானியங்கி முறையில் அமைத்து நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழி உரப்பாசனங்களை செய்துள்ளார். இந்த விவசாயி ஒரு ஹெக்டருக்கு ரூ.11 ஆயிரத்து 200-ஐ தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ரூ.28 ஆயிரத்து 800-ஐ தோட்டக்கலை வளர்ச்சி வாரியத்தின் நிதியில் நுண்நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சேலம் துணை இயக்குநர் அலுவலத்திலும் மானியமாக மொத்தம் ஒரு ஹெக்டருக்கு ரூ.40 ஆயிரம் பெற்று சாகுபடி செய்துள்ளார். மேலும் அவர் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட முழுவதும் நீரில் கரையக்கூடிய இரசாயன உரங்களை வேளாண்மைத்துறை மூலம் மானியமாக பெற்று குறிப்பிட்ட காலங்களில் நீர்வழி உரப்பாசனம் செய்தார். துல்லிய பண்ணையம் மூலம் கரும்பு பயிரிட்டதால் ஒரு ஹெக்டருக்கு 205 மெட்ரிக் டன் கரும்பு மகசூல் எடுத்துள்ளார். கரும்பு வயல் அறுவடை தின விழாவில் சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன், சேலம் வேளாண் துணை இயக்குநர்(மத்தியரசு திட்டங்கள்) ஜீ.உதயகுமார், ஏத்தாப்பூர் ஆமணக்கு மற்றும் மரவள்ளி ஆராய்ச்சி நிலயைத்தின் உதவி பேராசியர் (உழவியல்) கே.திருக்குமரன் மற்றும் துல்லிய பண்ணைய விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகளின் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது . விவசாயின் சாதனையை அனைவரும் பாராட்டினர். இதுகுறித்து விவசாயி ராஜா கூறியது: கடந்த ஆண்டு இதே ரகம் கரும்பு சாதாரண முறையில் பயிரிட்ட போது 40 மெட்ரிக் டன் மட்டுமே மகசூல் கிடைத்தது. தற்போது துல்லிய பண்ணையம் முறையில் பயிரிட்டதால் ஏக்கருக்கு 82 மெட்ரிக் டன் மகசூல் கிடைத்துள்ளது என்றார். இதுகுறித்து சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன் கூறியது:சங்ககிரி வேளாண் உட்கோட்டத்தில் துல்லிய பண்ணையம் திட்டத்தின் மூலம் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தொடர்ந்து அதிக மகசூலை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தினை முறையாக மற்ற விவசாயிகளும் பயன்படுத்தினால் அதிக மகசூலை பெறுவதோடு நிகர லாபத்தினையும் அடைய முடியும் என்றார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது