இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பாசன தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பாதி சாவியாகி விட மீதி கருகுகிறது : மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகளின் சோகம்பருவம் தப்பி பெய்த மழை, தாமதமாக திறக்கப்பட்டு அதையும் தற்போது நிறுத்தி விட்ட வைகை பாசன தண்ணீர் என தொடர் தாக்குதலால், நட்ட நெல்லை அறுவடை செய்ய முடியாமல் பாதி சாவியாகவும், எஞ்சியதை கருகவிட்டும் மேலூர் பகுதி விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர், கொட்டாம்பட்டியில் 25 ஆயிரத்து 545 ஏக்கர் நஞ்சை நிலங்களும், 21 ஆயிரத்து 33 ஏக்கர் புஞ்சை நிலங்களும் உள்ளது. இவ்விரு பகுதியில் உள்ள 63 ஊராட்சிகளில் 40 ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பெரியாற்று கால்வாய் மூலம் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. எஞ்சிய 23 ஊராட்சிகள் கண்மாய், கிணறு துணையுடன் விவசாயம் மேற் கொள்கிறது. ஆண்டு தோறும் ஆகஸ்ட்டில் மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் தண்ணீர் மேலூர் வந்தது. தண்ணீர் தொடர்ந்து வருமா ? என சந்தேகத்தில் இருந்த விவசாயிகள் பணிகளை துவக்க சிறிது கால தாமதம் செய்தனர்.

அந்த நேரத்தில் தொடர் மழை பெய்யவே, தைரியமாக விவசாய பணிகள் துவக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களில் பெய்த அளவு மேலூர் பகுதியில் இல்லை. இந்நிலையில் வைகை பாசன தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு தண்ணீர் இருந்தால் பயிரை காப்பாற்றிவிடலாம் என்னும் நிலை பல இடங்களில் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் உறங்கான்பட்டி, ஐவத்தாம்பட்டி, பழையூர்பட்டி, கீழையூர், இ.மலம்பட்டி போன்ற கடைமடை பகுதிகளில் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது. பல இடங்களில் சாவியாக நெல்லை அறுவடை செய்யும் நிலை தொடர்கிறது. வெள்ளலூர் விவசாயி ராஜா : ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிர் செய்துள்ளோம். தண்ணீர் பற்றாக்குறையால் பல இடங்களில் நெற் கதிர்கள் கருகி கொண்டுள்ளது. இன்னும் இரண்டு தண்ணீர் கொடுத்தால் சில இடங்களில் பயிரை காப்பாற்றி விடலாம். ஆனாலும் பெரும்பகுதி பயிர்கள் கருகி வருகிறது என்பதே உண்மை. மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார். பழையூர்பட்டி விவசாயி கணேசன் : சாவியான பயிர்களை மாடுகளை விட்டு மேயவிடுகிறோம். கடன் வாங்கி செலவு செய்த பணம் அனைத்தும் போச்சு. கண்மாயை ஒட்டி உள்ளவர்களின் ஆயில் பம்பு உதவியுடன் தண்ணீரை எடுத்து சிலர் பயிரை காப்பாற்றி வருகின்றனர். அதற்கு செலவு செய்யும் பணத்தையாவது அவர்கள் திருப்பி எடுப்பார்களா? என்பதும் சந்தேகம் தான் என்றார். மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாய கடன் தள்ளுபடி, நில வரி ரத்து போன்றவை செய்யப்பட்டால் தான் இப்பகுதி விவசாயிகள் கடன் சுமையில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment