செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகளிடம் வரவேற்பு: ஆட்சியர்
1:41 PM செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகளிடம் வரவேற்பு: ஆட்சியர், செய்திகள் 0 கருத்துரைகள் Admin
தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வியாழக்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு மாவட்டத்தில் முழு பரப்பளவிலும் செம்மை நெல் சாகுபடி முறைக்கு மாற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் வேளாண்மை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆத்மா திட்டம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டம், நெல் விதைப்பண்ணைகள், வேளாண் மருந்தகம் மற்றும் சிறு மண் ஆய்வுக்கூடம், டான்வாப் பண்ணை மகளிர் குழுக்களுக்கான மானியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் கள ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பழையகாயல், முக்காணி, பேரூர், திருச்செந்தூர் ஒன்றியம் ஆறுமுகநேரி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அங்கமங்கலம், குறுக்காட்டூர், தூத்துக்குடி ஒன்றியம் கூட்டுடன்காடு ஆகிய கிராம பகுதிகளில் வயல் வெளிகளில் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது செம்மை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, இந்த திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறியீடு 19 ஆயிரம் ஹெக்டேர் ஆகும். இதுவரை 19,081 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி 8200 ஹெக்டேர் குறியீடு ஆகும். ஆனால், மாவட்டத்தில் 8230 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மொத்த நெல் சாகுபடி பரப்பும் செம்மை நெல் சாகுபடி முறைக்கு மாற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் ஆத்மா, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டம் போன்ற மத்திய அரசின் பல்வேறு மானியத் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேளாண் மருந்தகம் மற்றும் சிறு மண் ஆய்வுக்கூடம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 5 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். இந்த ஆய்வின் போது வேளாண்மைத் துறை இணை இயக்குநர் லுயிஸ் ராஜரத்தினம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனசிங் டேவிட், வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசுந்தர், ஆத்மா திட்ட முதன்மை அதிகாரி ஜோசப் நசரேன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
குறிச்சொற்கள்: செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகளிடம் வரவேற்பு: ஆட்சியர், செய்திகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது