இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காவிரி டெல்டா கடலோரப் பகுதிகள் பாதிக்கும் அபாயம்

புவி வெப்பமயமாதலால் எதிர்காலத்தில் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ச. இன்னாசிமுத்து. திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பில், புவி வெப்பமடைதல்} மானுடப் பொறுப்பு’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை இரு நாள் தேசியக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: புவி வெப்பமயமாதல் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. புவி வெப்பமயமாதலால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புவி வெப்பமயமாதலால் பனி மலைகள் உருகி தண்ணீராகி கடலில் கலக்கின்றன. இதனால், கடல் நீர்மட்டம் உயர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கரியமில வாயுவின் அளவு எப்போது மிகக் குறைவாகிறதோ அப்போது பனியூழி எனப்படும் மிகக் குளிர்ந்த வெப்பநிலை நிகழ்கிறது. இயந்திரமயமாக்கலுக்கு முன்னர் 270 பி.பி.எம். ஆக இருந்த கரியமில வாயுவின் அளவு, 1961 ஆம் ஆண்டில் 313 பி.பி.எம். ஆக உயர்ந்துள்ளது. இதே அளவு 2005 ஆம் ஆண்டில் 375 பி.பி.எம். ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, புவி வெப்பமயமாதல் காரணமாக 3391 சதுர கி.மீ. ஆக இருந்த இமயமலை பனிப்பாறைகளின் தொடர் அளவு 2,721 ச.கி.மீ. ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் கடல் பகுதி மிகக் குறைந்த உயரத்திலேயே உள்ளது. புவி வெப்பத்தால் எதிர்காலத்தில் கடல் மட்டம் அதிகரித்து இப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. புவி வெப்பமயமாதலால் வேளாண்மை, நீர், சக்தி, போக்குவரத்து, உடல்நலம், உள் கட்டமைப்பு, பொருளாதாரம், பேரழிவு மேலாண்மை போன்றவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படும். புவி வெப்பத்தைக் குறைக்க பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தேவையைக் குறைக்க வேண்டும். மாற்றுச் சக்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்றார் இன்னாசிமுத்து. இந்தக் கருத்தரங்குக்கு தூய வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் பி. சூசை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இர. ராசரத்தினம் ஆய்வுக் கோவையை வெளியிட, கல்லூரி அதிபர் சூசை, இணை முதல்வர் செபாஸ்டின் ஆனந்த் ஆகியோர் அதைப் பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கட்டுரையாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் வாசித்தனர். தொடர்ந்து நடைபெற்ற அமர்வில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பேசினார். கருத்தரங்க முன்னுரையை முனைவர் ஆ. ஜோசப் நிகழ்த்தினார். தொடக்க விழாவில் சென்னை லயோலா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் சி.அ. ராசராசன், பேராசிரியர் இ. சூசை, முனைவர் பி. செல்வக்குமரன், செ. கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவர் அ. குழந்தைசாமி வரவேற்றார். சி. மணிவளன் நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment