பிப். 20 ஆர்ப்பாட்டம்; மார்ச் 1-ல் மறியல்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
1:44 PM செய்திகள், மார்ச் 1-ல் மறியல்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு 0 கருத்துரைகள் Admin
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்ச் 1-ம் தேதி மாநில அளவிலான மறியல் போராட்டம் நடத்தவுள்ளது.மேலும், வரும் 20-ம் தேதி பால்கூட்டுறவு சங்கங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லை அடுத்த வையப்பமலையில் வியாழக்கிழமை நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஏ.எம். முனுசாமி, போராட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், ஆதிநாராயணா, ரங்கசாமி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முத்துசாமி, மாரிமுத்து உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:விவசாயிகளின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக குடியிருக்கும் நபர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சைக்கிள் பிரசாரம், நடைபயணம், கிராமக் கூட்டங்கள், பேரணி ஆகியவை நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக, மார்ச் 1-ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், கொல்லிமலை, நாமக்கல் ஆகிய 5 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.பசும்பால் கொள்முதலில் லிட்டருக்கு ரூ. 5-ம், எருமைப் பால் கொள்முதலில் லிட்டருக்கு ரூ. 8-ம் உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடைகளுக்கான தீவனங்கள் மானியவிலையில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். கறவை மாடுக்கு மானிய கடன் வழங்க வேண்டும், பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சங்க நிர்வாக செலவுக்காக லிட்டருக்கு ரூ. 1 மானியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பால் கூட்டுறவு சங்கங்கள் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இக் கோரிக்கைகளுக்காக மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கக்கோரி மதுரையில் வரும் 7-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் திரளாக பங்கேற்பது, மரபணு மாற்ற கத்திரிக்காயை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசை அறிவிக்க வலியுறுத்தி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிச்சொற்கள்: செய்திகள், மார்ச் 1-ல் மறியல்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது